
கரூரில் இருசக்கர வாகனங்களைத் திருடிச் சென்றவர்களை ஊர்மக்கள் கையும் களவுமாகப் பிடித்து மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே போத்தராவுத்தன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காக்காயம்பட்டி கிராமத்தில் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், வெள்ளாடுகள் தொடர்ந்து திருடப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் இருசக்கர வாகனங்களைத் திருடிச் சென்றுவிட்டு அவ்விடத்தில் கத்திகளையும் சில பாதுகாப்பு ஆயுதங்களையும் பொருட்களையும் விட்டுச் சென்றதால் திருடிய வாகனங்களுடன் அதே பகுதிக்கு வந்து எடுக்க முற்படும்பொழுது பொதுமக்கள் மடக்கிப் பிடித்து மூன்று சிறுவர்களையும் மரத்தில் கட்டிப் போட்டுள்ளனர் கிராம பொதுமக்கள்.
இப்பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் வெள்ளாடுகள் திருடு போனதை மீட்டுத் தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்து காக்காயம்பட்டி நான்கு வழிச் சாலையில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் பஸ்ஸை நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பத்துக்கும் மேற்பட்ட தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். திருடு போன இருசக்கர வாகனங்கள் மற்றும் வெள்ளாடுகளைப் பாதிக்கப்பட்டவர்கள் பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தினர்.
தகவல் அறிந்த குளித்தலை துணைக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். தொடர்ந்து பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த நான்கு நபர்களைத் தோகைமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தோகைமலை போலீசார் நான்கு நபர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.