அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 188 பேருக்கு கரோனா பாதிப்பு என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நோய் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அவரவர் கிராமங்களில் கொண்டுபோய் இறக்கிவிட்டு வீட்டிலேயே தனித்திருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
அதிகாரிகள், நோய்க் கண்டறியப்பட்டவர்களை மருத்துவமனையிலோ, முகாமிலோ வைத்து சிகிச்சை அளிக்காமல் வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டதைக் கண்டு அந்தந்தக் கிராம மக்கள் கோபம் அடைந்தனர். நோய் உள்ளவர்களை அவர்கள் வீடுகளில் தனித்து இருக்க வைத்தால் பலர் கட்டுப்பாடாக இருக்கமாட்டார்கள். கண்டபடி சுற்றுவார்கள், இதனால் ஊரிலுள்ள மற்றவர்களுக்கு நோய்ப் பரவும் நிலை உள்ளது.
இந்த நிலையில் வீட்டுக்குள் தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்துக்கொள்ள சொன்னவர்களில் எத்தனை பேர் கட்டுப்பாடாக இருப்பார்கள், ஊரடங்கு உத்தரவின்போது கட்டுப்பாடில்லாமல் திரிந்தவர்கள் ஏராளம், எனவே நோய் கண்டறியப்பட்டவர்களை முகாமில் வைத்து சிகிச்சை அளித்து நோய் குணமான பிறகு வீடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பெரியாகுறிச்சி கிராம மக்கள் விடிய விடியப் போராட்டம் நடத்தி கோரிக்கை வைத்தனர்.
அரியலூர் டிஎஸ்பி திருமேணி, செந்துறை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் பெரியாகுறிச்சி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கிராம மக்கள், நோய்க் கண்டறியப்பட்டவர்களை முகாம்களில் அல்லது மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளித்து குணமான பிறகு ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும், அதற்குள் அவர்களை வீட்டுக்கு அனுப்பக் கூடாது என்று கூறினார்கள்.
இதையடுத்து நோய்க் கண்டறியப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை மீண்டும் வாகனங்கள் மூலம் முகாம்களுக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர். அதிகாரிகள் இந்தப் பிரச்சனையில் சரியான நடவடிக்கை எடுக்கமுடியாமல் திணறி வருகிறார்கள்.