கடலூர் திமுக மேற்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான சி.வி. கணேசன் தலைமையில் ‘என் குப்பை என் பொறுப்பு என் நகரம் என் பெருமை’ என்ற திட்டம் இன்று துவங்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் சுற்றுச்சூழல் மாசை குறைக்கவும், சுகாதாரம் காக்கவும் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள் இணைந்து நகரம் கிராமம் என அனைத்து பகுதிகளிலும் தூய்மையை வலியுறுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
அமைச்சர் சி.வி. கணேசன், இன்று காலை விருத்தாசலம் நகரத்தில் 300க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், திமுக தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோருடன் இணைந்து தூய்மைப் பணியை துவக்கி வைத்தார்.
அப்போது அவர், “நம்மைச் சுற்றியுள்ள இடங்களின் சுற்றுச்சூழல் மாசு இல்லாமல் இருந்தாலே மக்களுக்கு நோய் நொடி ஏற்படாது. எனவே ஒவ்வொரு குடும்பத்தினரும் அவரவர் வீட்டுப் பகுதிகளில் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குப்பைகளை கண்ட இடங்களில் போடக்கூடாது. ஒன்றுசேர்த்து பாதுகாப்பாக தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அல்லது நகர கிராம பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் அவைகளை கொட்ட வேண்டும். அதே போன்று வீடுகளை சுற்றிலும் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தினரும் இதில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், நகர் மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், துணைத் தலைவர் ராணி தண்டபாணி, நகராட்சி கமிஷனர் சசிகலா, பொறியாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் நகரமன்ற கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.