கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இருந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் என்ற விவசாயி. இவர், தான் கிரயமாக பெற்ற நிலத்தை பட்டா மாற்றம் செய்து தரும்படி இணைய வழி மூலம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்துள்ளார். பட்டா மாற்றம் செய்வதற்கு அதிகாரிகள் காலதாமதம் செய்துள்ளனர். இதையடுத்து ஜெயராமன், கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வனை அணுகி உள்ளார்.
கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வனிடம், பட்டா மாற்றம் செய்யுமாறு அனுப்பப்பட்ட மனுவிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கேட்டுள்ளார். உடனே கிராம அதிகாரி கலைச்செல்வன், 2500 ரூபாய் லஞ்சமாக பணம் கொடுத்தால் பட்டா மாற்றம் செய்து தருவதாக பேரம் பேசி உள்ளார்.
இதனால், வேதனை அடைந்த ஜெயராமன், இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், விவசாயி ஜெயராமனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர்.
அதன்படி நேற்று கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வனை சந்தித்த விவசாய ஜெயராமன், லஞ்சப் பணம் 2500 ரூபாய் அவரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையிலான போலீசார் கலைச்செல்வனை லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மாவட்டம் தோறும் தினசரி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்து வரும் நிலையில், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும் அலுவலர்களும் அதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம் என்று துணிந்து லஞ்சம் வாங்குவதும் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது.