மறைந்த தமிழக முதல்வர் கலைஞரின் 98ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகமெங்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சியினர்கள் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் நலத்திட்ட உதவிகளாக செய்து வருகிறார்கள். அதன்படி திட்டக்குடி தொகுதி எம்.எல்.ஏவும் தொழிலாளர் நல மேம்பாட்டுத்துறை அமைச்சருமான சி.வி.கணேசன் இன்று (04.06.2021)காலை திட்டக்குடி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலைஞர் திருவுருவப் படத்தை திறந்து வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதோடு அப்பகுதியில் இருந்த மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் இளமங்கலம், இடைச்செருவாய் ஆகிய கிராம பகுதிகளில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு கரோனா நோய் பரவல் காரணமாக பசியாற்றும் நோக்கத்தில் அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை பல்வேறு மக்களுக்கும் வழங்கி சிறப்பித்தார். திட்டக்குடி நகரில் மதுரா மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி அரசு அனுமதி பெற்று கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை அமைச்சர் சி.வி.கணேசன் பார்வையிட்டு திறந்துவைத்தார்.
இந்த மருத்துவமனையில் 25 படுக்கைகள், ஆறு தீவிர தீவிர சிகிச்சை பிரிவுகள் பதினோரு ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளிட்டவை சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இங்கு பணிபுரியும் டாக்டர்கள் சபரிராஜன், கிருத்திகா சபரிராஜன், விஷ்ணு ராஜன் குழந்தைகள் நல டாக்டர் நமரத்தா விஷ்ணு ராஜன் ஆகியோர் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் 24 மணி நேரமும் இந்த மருத்துவமனையை தொடர்பு கொள்ளலாம். அவர்களைப் பாதுகாப்பாக கொண்டு வந்து இம்மருத்துவமனையில் வைத்து சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். இந்த மருத்துவமனை திறப்புவிழா நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.கணேசனுடன், திட்டக்குடி திமுக நகர செயலாளர் பரமகுரு, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், இளைஞரணி சேதுராமன், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகி கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திட்டக்குடி பகுதியில் கரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள் அரியலூர், பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் ஆகிய நீண்ட தூரமுள்ள மருத்துவமனைகளுக்கு சென்று தான் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை இருந்து வந்தது. அந்த நிலைமையை மாற்றி இந்தப் பகுதியிலேயே அதற்கான ஒரு மருத்துவ சிகிச்சை மையத்தை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சருக்கும், மதுரா மருத்துவமனை மருத்துவர்களுக்கும் அதன் நிர்வாகத்தினருக்கும் பொதுமக்கள் தரப்பில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.