தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்து வருகிறார். கடந்த வாரம் 28 ஆம் தேதி தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிலையில், இன்று புதுச்சேரி காரைக்கால் உட்பட 19 மாவட்டங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மேடை ஏறிய நடிகர் விஜய் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற தொடங்கினார். அவர் உரையில், ''கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி நீட் எக்ஸாம் நடந்தது. அதில் சில குளறுபடிகள் எல்லாம் நடந்ததா செய்திகள் எல்லாம் பார்த்தோம், படித்தோம். அதன் பிறகு என்ன ஆகிவிட்டது என்று பார்த்தால் நீட் தேர்வுக்கு மேலே இருக்கின்ற நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் போய்விட்டது. இனிமேல் நாடு முழுக்க நீட் தேவை இல்லை என்பதை நாம் செய்திகள் மூலம் தெரிந்து கொண்ட விஷயம். சரி இதற்கு என்னதான் தீர்வு, நீட் விலக்குதான் தீர்வு. தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதற்கு ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இதைச் சீக்கிரமாக சால்வ் பண்ண வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கு நிரந்தர தீர்வுதான் என்ன என்று கேட்டால் கல்வி வந்து பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். ஒருவேளை அதில் ஏதாவது சிக்கல் இருக்கு என்றால் ஒரு இடைக்கால தீர்வாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி ஒரு சிறப்பு பொதுப்பட்டியல் என்று உருவாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தைச் சேர்க்க வேண்டும். இப்பொழுது இருக்கிற பொதுப்பட்டியலில் என்ன பிரச்சனை என்றால் அதில் உள்ள துறைகள் எல்லாம் பார்த்தால் மாநில அரசுகளுக்கு என்னதான் அதிகாரம் இருந்தாலும் அது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கு. மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். இந்தச் சந்தர்ப்பத்தில் என்னுடைய பரிந்துரையைச் சொல்ல வேண்டும் என ஆசைப்பட்டேன். இதுதான் என்னுடைய தனிப்பட்ட ஒரு கருத்து நீட்டைப் பற்றி'' என்றார்.
நடிகர் விஜய்யின் நீட் பற்றிய பேச்சு குறித்து தனியார் சேனலுக்கு தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ள தமிழிசை சௌந்தரராஜன், ''இது வலுவான குரல் அல்ல வருந்தத்தக்க குரல் என்று நான் சொல்கிறேன். எல்லாரும் சொல்கிறார்கள் என்பதற்காக மாணவர்களுக்கு நன்மை தருகின்ற ஒரு திட்டத்தை வெளியே தள்ள முடியாது. சட்ட விதிகளுக்குள் பேசினால் சுப்ரீம் கோர்ட் ஆர்டர். விஜய் 3 விஷயங்களை சொல்லி இருக்கிறார். நீட் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பட்டியல் இன மாணவர்களுக்கு எதிராக இருக்கிறது என்று சொல்லியுள்ளார். அதை நான் மறுக்கிறேன். நீட்டில் எல்லா இட ஒதுக்கீடும் பின்பற்றப்படுகிறது. இரண்டாவது சிலபஸ்-ஐ வைத்து சொல்லி இருக்கிறார். நீட்டில் எல்லா சிலபஸ்ஸும் பின்பற்றப்படுகிறது. மூன்றாவது கல்வி மாநிலப் பட்டியலில் 1975 க்கு முன்னால் இருந்தது என்று சொல்கிறார். அது திமுக இருக்கும் போது தான் மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் (திமுக) மத்தியில் பல ஆண்டுகள் இருந்த பின்பும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர முயற்சி செய்யவில்லை. ஆனால் புதிய கல்விக் கொள்கை மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல் என இல்லாமல் பொதுவான மக்களுக்கு, மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை பொறுத்தவரை எத்தனை கிராமப்புற மாணவர்கள் இதற்கு நீட் தேர்வுக்கு முன்னால் பயன் பெற்றார்கள்? நீட் தேர்வுக்கு பின்னால் பலன் பெற்றார்கள் என்று பார்க்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.