தேனியில் நடிகர் விஜய்யை எம்.ஜி.ஆர் போல் சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர் ஒரு மணி நேரத்தில் கிழிக்கப்பட்டதோடு போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய்யின் திருமண நாளன்று நடிகர் விஜயையும் அவரது மனைவியையும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக அமைச்சர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், தற்போது தேனியில் மீண்டும் எம்.ஜி.ஆர் போல் விஜய்யை உருவகப்படுத்தி சித்தரிக்கப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
அதில் 'ரிக்ஷாக்காரன்' படத்தில் வரும் காட்சியில் எம்.ஜி.ஆர் ரிக்ஷாவின் பின்சீட்டில் அமர்ந்திருப்பது போலவும், நடிகர் விஜய் ரிக்ஷா ஓட்டுவது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. மறுபக்கம் 'எங்கள் வீட்டுப் பிள்ளை' படத்தில் எம்.ஜி.ஆர் சாட்டையைப் பிடித்திருக்கும் காட்சியைப் போல் நடிகர் விஜய் சித்தரிக்கப்பட்டு, 'மாஸ்டர் வாத்தியார்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அந்த போஸ்டரில், 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் தலைமை ஏற்க விஜய் வரவேண்டும் என வாசகங்கள் இடம் பெற்றிருந்தது.
ஆனால் இந்த போஸ்டர் ஒட்டப்பட்ட பகுதி தடை செய்யப்பட்ட பகுதி எனவும், அனுமதி கேட்காமல் போஸ்டர் ஒட்டப்பட்டதாக ஒரு மணி நேரத்திலேயே அந்த போஸ்டர் கிழிக்கப்பட்டதோடு, போஸ்டர் ஒட்டிய விஜய்ரசிகர் மீது தேனி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.