2022- 2023 ஆம் ஆண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை இன்று (18/03/2022) காலை 10.00 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இதில், சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரத்தைத் தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும். இளைஞர்கள் வேலை வாய்ப்பு திறனைப் பெறும் வகையில் செயல்படுத்தப்படும் நான் முதல்வன் திட்டத்திற்கு ரூபாய் 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வணிக வழக்குகளை விரைந்து விசாரிக்க ஏழு வணிக நீதிமன்றங்கள் அமைக்க பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியான நிலையில், மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கான ரூபாய் 1,000, மாணவ, மாணவியர்களுக்கான கல்வி கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெறாததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் குறித்து அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கல்வி குறிப்பாக பெண் கல்வி, பொது மருத்துவம், பெண்கள் முன்னேற்றம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல், சமூகநீதி, சமூக நல்லிணக்கம் உள்ளிட்ட மிக முக்கிய அம்சங்களில் தமிழக நிதிநிலை அறிக்கை தீவிர கவனம் செலுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
அரசுப் பள்ளிகளில் 6 - 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வங்கி கணக்கில் வழங்கப்படும். சமூக வலைதள பொய் பரப்புரைகளை தடுக்க காவல்துறையில் சமூக ஊடக சிறப்பு போன்ற முக்கியமான அறிவிப்புகள் மகிழ்ச்சியளிக்கிறது. பெரியாரின் சிந்தனைத் தொகுப்பு, 21 இந்திய மற்றும் உலக மொழிகளில் ரூபாய் 5 கோடி செலவில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாக வெளியிடப்படும் என்கிற அறிவிப்பு தமிழகத்தின் பெண்ணுரிமை, சமூகநீதி, சுயமரியாதை வரலாற்றை இந்தியாவெங்கும் எடுத்துச்செல்லும் சிறப்பான முயற்சி. பாராட்டுகள்!
தமிழக அரசு சமூகநீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூக நல்லிணக்கப் பாதையில் உறுதியோடு பயணிக்கும் என்று இந்த நிதிநிலை அறிக்கை இன்னொரு முறை உரக்கச் சொல்லியிருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும், நன்றியும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.