தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்த நிலையில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை, கடலூர் ஆகிய இடங்களில் மழை நீரால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கிய நிலையில், குமரி மாவட்டத்திற்கு நேரில் சென்று மழை சேதங்களை ஆய்வு செய்தார். மழை சேதம் குறித்து ஆய்வுகள் செய்ய அமைச்சர்கள் கொண்ட குழுவையும் முதல்வர் நியமித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட சேதங்கள், சாலைகள், வடிகால்களை சீரமைப்பு செய்ய 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரில் மூழ்கிச் சேதமடைந்த பயிர்களை மறுசாகுபடி செய்ய ஹெக்டேருக்கு 1,038 ரூபாய் மதிப்பீட்டில் இடுபொருட்கள் வழங்கப்படும். மழையில் முழுவதுமாக சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு 20 ஆயிரம் வழங்கப்படும். குறுகிய கால நெல் விதை - 45 கிலோ, நுண்ணூட்ட உரம் - 25 கிலோ, யூரியா - 60 கிலோ, டிஏபி உரம் - 125 கிலோ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.