தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 234 தொகுதிகளில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய், பள்ளி மாணவ மாணவிகளுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தார். அந்த நிகழ்ச்சியின் போது நடிகர் விஜய் பேசிய வார்த்தைகள் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அப்போது பெரியார், அம்பேத்கர், காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிப் படிக்க வேண்டும் என மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் கூறிய அறிவுரையை ஏற்று கரூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி கிராமம் காலனி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கர்மவீரர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கினர். அதைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களான மழலைச் செல்வங்கள் காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து அழகாக எடுத்துரைத்தனர்.
நடிகர் விஜய் கூறிய அறிவுரையை ஏற்று காமராஜர் பிறந்த நாள் விழாவை ஒட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது எனவும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காமராஜரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் வழங்கப்பட்டதாகவும் மாவட்ட தலைவர் மதியழகன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.