நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் நடைபெற்றது. இதனையொட்டி மாலை 4 மணிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். அப்போது மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்த ராம்ப் வாக் மேடையில் ராம்ப் வாக் சென்றார். அப்போது அங்கிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள், ‘தளபதி, தளபதி’ என முழக்கமிட்டு உற்சாகப்படுத்தி வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர்கள் அவரை நோக்கி வீசிய அக்கட்சியின் துண்டை வாங்கி தோளில் அணிந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாமன்னர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். அதன் தொடர்ச்சியாக மாநாட்டு நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள 100 அடி கொடிக் கம்பத்தில் அக்கட்சியின் கொடியை விஜய் ஏற்றினார். பின்னணியில் கட்சியின் பாடல் இசைக்க லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சி ததும்ப த.வெ.க கொடியை விஜய் ஏற்றி வைத்தார்.
இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசுகையில், “மக்களோடு மக்களாகத் தொடர்ந்து நாம் களத்தில் தொடர்ந்து நிற்கப்போகிறோம். அது மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் உண்மையாக, உயிராக, உறவாக நாம் உள்ளோம். அவர்களின் ஆசீர்வாதத்தாலும், அமோக ஆதரவாலும், நம்மைத் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தில் அமர வைப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, ஆழமான நம்பிக்கை உள்ளது. நூறு சதவீதம் இந்த நம்பிக்கை உள்ளது.
இருந்தாலும் அப்படி நிறைவாக இந்த நிலையை அடைந்தாலும், நம்மை நம்பி, நம் செயல்பாட்டை நம்பி நம்மோடு சில பேர் வரலாம் இல்லையா?. அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம் இல்லையா?. அப்பட்டி வருபவர்களையும் அரவணைக்கவேண்டும் இல்லையா?. நமக்கு எப்போது நம்மை நம்பி வருபவரை அரவணைத்துத் தானே பழக்கம். அதனால் நம்மளை நம்பி களமாட வருபவர்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும். 2026ஆம் ஆண்டு ஒரு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு. நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்” எனப் பேசினார்.