Skip to main content

மத்திய அரசு கொண்டு வந்த மாற்றம்; ‘தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?’ - அமைச்சர் விளக்கம்!

Published on 23/12/2024 | Edited on 23/12/2024
change brought central govt Minister explained the position of the TN govt

இந்திய அரசியலமைப்பின் 86வது திருத்தச் சட்டம் 2002, இந்திய அரசியலமைப்பில் 21 -ஏ புதிய பிரிவைச் சேர்த்தது. அதன்படி, 6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வியை அரசு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட அடிப்படை உரிமையாக உத்தரவாதம் அளித்துள்ளது. இத்தகைய சூழலில் தான் கல்வி உரிமைச் சட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இவ்வாறு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்ச்சி என்ற முறையால் கல்வியின் தரம் குறைகிறது என விமர்சனங்களும் எழுந்தன. இத்தகைய சூழலில் தான், கட்டாயத் தேர்ச்சி கொள்கையில் மீண்டும் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி ஐந்தாம் வகுப்பிலும், எட்டாம் வகுப்பிலும் இறுதி ஆண்டு தேர்வு எழுதி மாணவ மாணவிகள் அந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறவில்லையெனில், 2 மாதங்கள் கழித்து மீண்டும் இந்த தேர்வை எழுத வாய்ப்பு அளிக்க வேண்டும். அதன்படி 2வது தேர்விலும் அந்த மாணவர் தேர்ச்சி பெறவிட்டால் அவர் அதே வகுப்பை மீண்டும் தொடர வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி என்ற முறையை ரத்து செய்துள்ளது.

இந்நிலையில் கல்வி உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களால் தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் கிடையாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் தொடர்ந்து தடையின்றி கல்வி பயின்றிட ஏதுவாக, எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கப்படும் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளைத் திருத்தம் செய்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களில் மறுதேர்வு முறையையும், அதிலும் தேர்ச்சி பெறாத குழந்தைகள் அதே வகுப்பில் ஓராண்டு பயில வேண்டும் என்ற முறையையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி நடத்தப்படும் மத்திய அரசுப் பள்ளிகளுக்கு, இந்தப் புதிய நடைமுறை பொருந்தும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், தடையின்றி எட்டாம் வகுப்பு வரை கல்வி பெறுவதில், ஒரு பெரிய தடைக்கல்லை மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது உண்மையிலேயே வருந்தத்தக்கது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தேசியக் கல்விக் கொள்கையைப் பின்பற்றாமல், மாநிலத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சிறந்த கல்வியாளர்களை ஒருங்கிணைத்து, ஒரு புதிய மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, அரசு தொடங்கிய பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளன.

change brought central govt Minister explained the position of the TN govt

தமிழ்நாட்டில், மாநிலக் கல்விக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் சூழ்நிலையில், மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய அரசுப் பள்ளிகளைத் தவிர பிற பள்ளிகளுக்குப் பொருந்தாது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனவே, தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும் ஒன்றிய அரசின் கல்வி உரிமைச் சட்ட விதிகள் குறித்து எந்தவகையிலும் குழப்பமடையத் தேவையில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும் என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்