பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் நக்கீரன் செய்தி வெளியிட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி நக்கீரன் ஆசிரியர் கடந்தாண்டு அக்டோபர் 9 ம் தேதி போலீசார் கைது செய்யப்பட்டார்.
பின்னர், போலீசார் அவரை சிந்தாதிரிப்பேட்டை, காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியரை விடுவிக்கக்கோரி வைகோ தலைமையில் ஏராளமானோர் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வைகோ காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அவரை அப்புறப்படுத்த முயன்ற போலீசாருக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் இந்திய தண்டனை சட்டம் 190, 353,290 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இந்த வழக்கில் போலிசார் புலன் விசாரணை செய்து வைகோ மீது எழும்பூர் 14 வது மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் அந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதன்படி வைகோ நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியிருந்தார்.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ தொடர்பான வழக்குகளை விசாரிக்க எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் மாஜிஸ்திரேட் தலைமையில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.
அதன் பிறகு வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளனர். ஊடகத்துறைக்கு போதிய பாதுகாப்பு இல்லை அதேபோல இந்தி திணிப்பை ஒரு போதும் ஏற்கமாட்டோம். இறந்துபோன மொழி சமஸ்கிருதம் அந்த மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கவேண்டும் என்றால் எட்டாவது அட்டவணையிலுள்ள 22 மொழியும் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றார். தேன்கூட்டில் கைவைத்துள்ளார் அமித்ஷா குளவி கொத்ததான் செய்யும். பேனர்கள் வைப்பது தவறு அதை முதன் முதலில் நடைமுறைப்படுத்தியது மதிமுகதான் என்றார்.