மணல் தொழில் மட்டும் தான் கோடி கோடியாக பணம் கொட்டும் தொழிலாக இருந்தது. இதை மனதில் வைத்து பெரிய பெரிய ரவுடிகள் அரசியல்வாதிகளின் துணையோடு இன்னும் தமிழகத்தின் டெல்டா பகுதியில் மணல் கடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் மணல் எடுத்து ஆறுகளில் பெரிய பெரிய பள்ளமாக மாறி இருக்கிறது. இதனால் தண்ணீர் பிரச்சனை வரும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மணல் எடுக்கும் குவாரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் கிராமங்களில் வீடுகட்டுவது என்பது வழக்கமான ஒன்று தான். தன் வீட்டு கட்டுமானத்திற்கு தேவையான மணலை தாங்களே வண்டிகளில் எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் தற்போது கடுமையான கட்டுபாடுகள் இருப்பதால் வேலையில்லாத இளைஞர்கள் தங்களுடைய டூவிலர்களில் இரவு நேரங்களில் மணல் எடுத்து அதை வீடு கட்டும் இடங்களுக்கு கொடுத்து பணம் சம்பாதித்து வந்தனர்.
இந்த நிலையில் தான் குளித்தலை முன்னாள் எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம் ஏரியாவில் உள்ள ஒருவர் வீடு கட்டுவதற்கு மணல் வேண்டும் டாட்டா ஏசியில் கொண்டுவந்து கொடுங்கள் அதிகம் பணம் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியதும் இளைஞர்கள் உற்சாகம் அடைந்து கொஞ்சம் கொஞ்சமாக மணல் திருடி எப்போ சம்பாதிப்பது இதனால் டாட்டா ஏசியில் மணல் அள்ளி சென்றால் நிறைய பணம் கிடைக்கும் என்று நிறைய டூவிலர்களில் மணல்மூட்டை கட்டி திருட ஆரம்பித்திருக்கிறார்கள். அதை தடுக்க வந்த அதிகாரிகளையும் பணம் ஆசையில் அடித்து தாக்கி தற்போது சிறையில் இருக்கிறார்கள்.
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மருதூர் வடக்கு 2 பகுதியை சேர்ந்த பொதுமக்கள், இந்த பகுதியில் அனுமதியில்லாமல் டூவிலரில் திருட்டுத்தனமாக மணலை கடத்தி விற்கிறார்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஏஓ விஜயேந்திரனிடம் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
உடனே விஏஓ விஜயேந்திரன் தலைமையில் கிராம உதவியாளர் புஷ்பலதா மற்றும் அதிகாரிகள் மருதூர் வடக்கு பகுதியில் இரவு 11 மணி அளவில் சோதனையில் ஈடுபட்டனர். இப்போது காவிரி ஆற்றில் இருந்து டூவிலரில் மணல் கடத்தி வந்த 7 பேரை தடுத்து நிறுத்தினார். ஆனால் 7 பேரும் கிராம உதவியாளர் புஷ்பலதாவை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
தகவல் கேள்விபட்டு சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர் தாக்குதலில் காயம் அடைந்த புஷ்பலதாவை குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் வருவாய்துறையினர், மருதூர் வடக்கு 2 பகுதியில் மணல் கடத்தல் நடக்கிறது. இதை தடுக்க சென்ற அதிகாரி மீது தாக்குல் நடத்தியுள்ளனர் என்று குளித்தலை இன்ஸ்பெக்டர் பாஸ்கரனிடம் புகார் கொடுத்தனர். உடனே களத்தில் இறங்கிய போலீஸ், தப்பியோடிய மணல் திருடர்களை பிடித்து வழக்கு பதிந்து சிறைக்கு அனுப்பியுள்ளார்கள்.