ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்பாட்டில் அன்னை இன்பிரா என்ற பெயரில் பைப் மற்றும் சில இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் மேலான் இயக்குனராக இருப்பவர் பெருந்துறையை சேர்ந்த அசோக்குமார். இந்த அசோக்குமார் மறைந்த முன்னாள் பெருந்துறை எம்.எல்.ஏ. வி.பி.பெரியசாமியின் அக்கா மகன்.
தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கான மாநிலங்கள் வரை இந்த நிறுவனத்தின் தொழில் நீடித்துள்ளது. இப்போது ஆந்திரா மாநில போலீல் நேரடியாக ஈரோடு வந்து அசோக்குமாரை அள்ளிக் கொண்டு போய் அங்கு கைது செய்து சிறையில் வைத்திருக்கிறது. ரூபாய் 450 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி என்று தான் அசோக்குமார் கைது செய்யப்பட்டார். ஜி.எஸ்.டி. வரியே 450 கோடி மோசடி என்றால், அடேங்கப்பா அப்போது எத்தனை கோடிக்கு தொழில் நடத்தியிருக்க வேண்டும் என்ற அதிர்ச்சியான கேள்வியுடன் எல்லா டாக்குமென்ட்டுகளையும் அலசி ஆராய்ந்தபோது தான் அந்த அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்தது.
ஆந்திரா அரசிடம் போடப்பட்ட ஒப்பந்தப்பணிகளை முடியாமலேயே செய்து முடித்ததாக போலி ரசீதுகளை அளித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல் சப்ளை செய்ய வேண்டிய பைப்புக்களை கொடுக்காமலேயே கொடுத்தாகவும் விற்பனை செய்ததாக வழங்கிய போலி ரசீது மற்றும் ஆவணங்களை போலீசார் எடுத்துள்ளனர். இது தொடர்பாக ஆந்திரா மாநிலம் ஜி.எஸ்.டி.,- யின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தீவிர ஆய்விலும் விசாரனையிலும் உள்ளார்கள். ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு பல பகுதிகளில் இவருக்கு சொந்தமான இடங்களில் ரகசியமாக ரெய்டு நடத்தியுள்ளார்கள். சோதனையில் போலி ரசீதுகளை கைப்பற்றியுள்ளனர். அதற்கு மட்டும் மொத்தம் 450 கோடி ரூபாய் அளவிற்கு ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, நேற்று அசோக்குமாரை ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வருகிற 30ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிடப்பட்டுள்ளார். மேலும் போலீசார் அசோக்குமாரை போலீஸ் கஸ்டடி எடுக்க முடிவு செய்துள்ளார்கள். இவர் கடந்த ஒரு வருடத்தில் 2018 முதல் ஆகஸ்ட் 2019 ம் ஆண்டு வரை மட்டும் சுமார் 450 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த முன்னாள் பெருந்துறை எம்.எல்.ஏ. வி.பி.பெரியசாமி, 1994ல் நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டார். பெரியசாமிக்கு அமைச்சர் செங்கோட்டையன் தான் சீட் வழங்க ஏற்பாடு செய்தார் என்பதால், அதிகாரிகள் அமைச்சருக்கு வேண்டியவர்களையும் விசாரிக்கலாம் என்று கூறுகின்றனர்.