கோவை மாவட்டம், வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவரது தந்தை மகேஷ் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார். தன்னுடைய தந்தை டிரைவர் என்பதால், ஷர்மிளாவுக்கு சிறு வயது முதலே வாகனங்கள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் இருந்து, பிறகு தனியார் பேருந்து நிறுவனத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா சமூகவலைத்தளத்தில் பிரபலமாக இருந்துவந்தார். இந்நிலையில், தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் இவர் பேருந்தில் பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு அளவில் மிகவும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு அவர் அந்த நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பும் ஆதரவும் வந்தன. அதனைத் தொடர்ந்து ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன், ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு ஒரு கார் பரிசளித்தார்.
இந்நிலையில், கடந்த 2ம் தேதி கோவை மாவட்டம், சக்தி சாலையில் சங்கனூர் சந்திப்பு அருகே போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி போக்குவரத்து சரிசெய்யும் பணியில் இருந்துள்ளார். அப்போது, அப்பகுதிக்கு காரில் வந்த ஷர்மிளா, அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார். இதனால், பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி இது தொடர்பாக ஷர்மிளாவிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
உடனே ஷர்மிளா தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதில், “இந்த வீடியோவில் வரும் லேடி போலீஸ் வண்டிகளை வழிமறித்து, அபராதம் விதிக்காமல் கைநீட்டி பணம் வாங்குகிறார். டிரைவரை கெட்டவார்த்தையில் திட்டுகிறார். யாராக இருந்தாலும் மரியாதை முக்கியம். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் பிறகு இந்தத் தவறு நடக்கக் கூடாது. இதை அதிகமாக பகிருங்கள்” என்று பதிவு செய்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி, அது குறித்து கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பெயரில் சைபர் க்ரைம் போலீஸார் தற்போது ஓட்டுநர் ஷர்மிளா மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.