சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சாமி தரிசனம் செய்ய புதுச்சேரியில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் அண்ணாமலை பல்கலைக்கழக ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு வந்தார். இதனைத் தொடர்ந்து அவர் கார் மூலம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தார். இவரை நடராஜர் கோவில் தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பின்னர் அவர் சாமி தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து புவனகிரியில் உள்ள எல்லையம்மன் கோவிலுக்கு குடியரசுத் துணை தலைவர் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. புவனகிரியில் உள்ள எல்லையம்மன் கோவில் பொதுக் கோவிலாகும். இதனை பாஜக பிரமுகரான சீனிவாசன் என்பவர் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வர்மக்கலை சித்த மருத்துவம் உள்ளிட்ட வைத்திய முறைகளை செய்து வருகிறார். இவரிடம் பிஜேபி பிரமுகர்கள் பலர் இங்கு வந்து ரகசியமாக சிகிச்சை பெற்று சென்றுள்ளதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகின்றனர்.
“இந்த கோவிலில் பொதுமக்களை வழிபட விடாமல் தடுப்பதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த கோவிலை ஒட்டியுள்ள 1.25 ஏக்கர் நிலத்தை இவர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளார் என்றும், இந்த கோவிலின் உள்ளே யாரும் வழிபட அனுமதிப்பதில்லை என்பதால் சிதம்பரம் சப் கோர்ட்டில் வழக்கு எண் 14 /2020 வழக்கு உள்ளது. வரும் பிப்ரவரி 13ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
துணை ஜனாதிபதி வணங்க வரும் எல்லையம்மன் ஆலயம் ஒருநாளும் பொதுமக்கள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. எல்லையம்மன் ஆலயம் உள்ள சொத்தின் மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் துணை ஜனாதிபதி வருகை என்பது நீதியை நிலை நாட்ட முடியுமா? நீதியை மூடி மறைக்க உதவுமா? என்பதில் சந்தேகம் எழுகிறது. பொதுமக்கள் தெய்வ வழிபாடு செய்ய முடியாத ஆலயம்! பாமரன் நுழைய முடியாத ஆலயத்திற்கு ஒரு வார காலமாக அரசு இயந்திரங்கள் முழு வீச்சில் வேலை செய்வதும் அதற்காக அரசின் பணம் செலவிடப்படுவதும், அரசு ஊழியர்களையும் காவலர்களையும் இரவு முழுக்க தூக்கம் இன்றி வேலை வாங்குவதும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசிற்கும் அழகல்ல” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புவனகிரி ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் இந்தியக் குடியரசு துணைத் தலைவர் இந்த கோவிலுக்கு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நக்கீரன் இணையதளத்தில் ‘புவனகிரிக்கு வரும் குடியரசு துணைத் தலைவர்; மீண்டும் ஒரு சர்ச்சை’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் புவனகிரியில் உள்ள எல்லையம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யவிருந்த துணைக் குடியரசுத் தலைவரின் பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.