![Vellore Sathkar hill liquor issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/Bsx508-Zr6Y6Bc_V6QHiUiQvBRpg5YLFnVb-fumSTFc/1685948972/sites/default/files/inline-images/th_4279.jpg)
தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 23 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயத் தடுப்பு வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முழுவதுமாக ஒழிக்கும் நோக்கில் தொடர் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த சாத்கர் மலைப் பகுதியில், வேலூர் சரக டி.ஐ.ஜி. முனைவர் முத்துசாமி, எஸ்.பி மணிவண்ணன் ஆகியோர் கூட்டாக சுமார் நூறு காவலர்களுடன் மலைப் பகுதி முழுவதும் அதிடியாகத் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ட்ரோன் கேமிரா உதவியுடன் சோதனை செய்தபோது மலைப் பகுதிகளில் பல இடங்களில் சாராய அடுப்பு, ஊறல் இருப்பது கண்டறியப்பட்டு அதனை அடித்து உடைத்த காவல்துறையினர் தீயிட்டும் கொளுத்தினர்.
மேலும் சாராயம் காய்ச்சி சுடச்சுடப் பேரல், பல இடங்களில் மண்ணில் குழி தோண்டி ஊற வைக்கப்பட்ட சாராய ஊரல்களை காவல்துறையினர் கீழே ஊற்றி அழித்தபோது காட்டுக்குள் சாராய ஆறு ஓடுவது போல் காட்சியளித்தது. அந்த இடங்கள் பல காலமாகச் சாராயம் காய்ச்சப் பயன்படுத்தப்படும் இடங்களைப் போன்று இருந்தது. மேலும் தொடர்ந்து மலைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் பல குழிகளும் அடுப்புகளும் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது.
டி.ஐ.ஜி. மற்றும் எஸ்.பி. மேற்கொண்ட ஆய்வின் போது மட்டுமே சுமார் 10,000 லிட்டருக்கு மேலான சாராய ஊரல்கள், ட்யூபுகளில் இருந்த கள்ளச்சாராயம், மூலப் பொருட்கள் உள்ளிட்டவற்றைக் கீழே ஊற்றியும் தீயிட்டுக் கொளுத்தியும் அழித்தனர். சாராயம் காய்ச்சுவதிலும் விற்பனை செய்வதிலும் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி எச்சரிக்கை செய்தார். மேலும், சாராயம் காய்ச்ச மூலப்பொருட்களை வழங்குவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மறுவாழ்வு வேண்டும் என விரும்புவோர் நேரடியாக எங்களை அணுகலாம் என்றார்.