வேலூர் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு வரும் ஆகஸ்ட் 5- ஆம் தேதி நடைபெறவுள்ளது. களத்தில் 28 வேட்பாளர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், அதிமுக சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
ஏ.சி.சண்முகத்துக்காக தேர்தல் பிரச்சாரத்துக்கு அதிமுக தலைமை 200 பேர் கொண்ட பிரமாண்ட பொறுப்பாளர்கள் படையை அறிவித்துள்ளது. திமுகவும் அதற்கு ஏற்றார் போல் ஒரு குழுவை அமைத்து தேர்தல் பணியை செய்து வருகின்றன. இந்த வேலூர் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டுமென இரண்டு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக மற்றும் அதிமுகவில் அமைக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் குழு வேலூர் தொகுதிக்கு வந்துவிட்டது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் தீவிரமாக களப்பணியை தொடங்கியுள்ளனர். ஒன்றிய, நகர நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். மாவட்ட மற்றும் மாநில அளவிலான நிர்வாகிகள், அமைச்சர்கள் வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள ஹோட்டல் விடுதிகளில் அறையெடுத்து தாங்கியுள்ளனர். இரண்டு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரத்துக்கு வருகை போன்ற காரணங்களால் வேலூர் தொகுதி முழுவதும் பிற மாவட்ட கரை வேட்டிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.