வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் தேதியை கடந்த ஜூலை மாதம் 4- ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 06.00 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், கட்சித்தலைவர்கள் ஆகியோர் இன்று மாலை 06.00 மணிக்கு மேல் தேர்தல் நடைபெறவுள்ள வேலூர் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும், இன்று மாலை 06.00 மணி முதல் ஆகஸ்ட் 5- ஆம் தேதி மாலை வாக்குப்பதிவு நிறைவடையும் வரை கருத்து கணிப்புகளுக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு.
இதனால் அதிமுக, திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள், தலைவர்கள் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உட்பட 28 பேர் களத்தில் உள்ளனர். ஆகஸ்ட் 5- ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 07.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். பதிவான வாக்குகள் ஆகஸ்ட் 9- ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.