வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிம்மணபுதூர் ஊராட்சி கோடியூர் கிராமத்தை சேர்ந்த திருப்பதி என்பவர், தனது கிராமத்தின் வளர்ச்சிக்காக பலமுறை அதிகாரிகளிடம் மனு தந்துள்ளார். அந்த மனுக்கள் மீது அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். அடிப்படை பிரச்சனைகளை கூட அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல் இருப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்று வருகிறது. அங்கு சென்று மனு தந்தாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என முடிவு செய்த திருப்பதி, அடுத்த கட்டமாக பாதிக்கப்பட்ட மக்கள் சிலர் ஒன்றிணைந்து கோடியூர் பஞ்சாயத்து அலுவலகத்தின் முன்பு கழுதை ஒன்றிடம் மனுவை தந்து தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளார்கள்.
அமைச்சர் வீரமணி வெற்றி பெற்ற ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த மக்கள், தாங்கள் தரும் கோரிக்கை மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை, இனி இவர்களிடம் மனு தருவதும், கழுதையிடம் மனு தருவதும் ஒன்று தான் என கழுதையிடம் மனு தந்தது அதிகாரிகளிடமும், ஆளும் கட்சியான அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.