வேலூர் மாநகரில் அரசின் சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த சட்டகல்லூரியில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டு புதிய கட்டிடத்தில் இயங்கி வந்தாலும், மாணவ, மாணவிகள் தங்குவதற்கான விடுதி வசதியை சட்டக்கல்லூரி நிர்வாகம் ஏற்படுத்தி தராமல் உள்ளது. இதுப்பற்றி மாணவ, மாணவிகள் பலமுறை முறையிட்டும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதோடு, பி.ஏ.பி.எல் படிப்பு மட்டுமே உள்ளது. எம்.எல் படிப்புக்கான வசதியை இன்னும் ஏற்படுத்தவில்லை. இதுப்பற்றி சட்டத்துறை அமைச்சர்க்கு கோரிக்கை அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த இரண்டு கோரிக்கையை பிரதானமாக முன்வைத்து சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி நிர்வாகம் இதுதொடர்பாக மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போது மாணவர்கள் எம்.எல் வகுப்புகள் தொடக்கம், விடுதி வசதி தொடர்பாக வாக்குறுதி தாருங்கள் என்கிற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை என்பதால் போராட்டம் தொடர்வதாக மாணவர்கள் கூறுகின்றனர்.