Skip to main content

தபால் வாக்கு விவகாரம்..! திமுகவின் இரண்டு வழக்குகளையும் முடித்துவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு..! 

Published on 27/03/2021 | Edited on 27/03/2021

 

Postal voting issue ..! High Court orders closure of two DMK cases ..!


முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் பெறும் தபால் வாக்குகள் வைக்கும் இடங்களைக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, எந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் இடம் தராத வகையில் கண்காணிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 

தபால் வாக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள முதியோர், மாற்றுத்திறனாளிகளின் பட்டியலை வழங்கக் கோரி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மார்ச் 29ஆம் தேதி மாலை 6 மணிக்குள் பட்டியலை வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. 

 

ஆனால், இந்த உத்தரவின்படி பட்டியல் வழங்கப்படவில்லை எனக் கூறி திமுக தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் தபால் வாக்குப் பதிவு செய்வதில் முறைகேடுகளைத் தவிர்க்க, தபால் வாக்கு உறைகளில் வேட்பாளர்களின் பிரதிநிதிகளின் கையெழுத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியும் திமுக தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

இந்த இரு மனுக்களும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், பெரும்பாலான இடங்களில் தபால் வாக்காளர்களின் பட்டியலை வழங்காமலே வாக்குகள் பெறப்பட்டு வருவதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவு முறையாக நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

 

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான ஜி.ராஜகோபாலன், மனுதாரர் கோரிக்கையைப் பரிசீலித்ததாகவும், பட்டியல் வழங்கப்பட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகே தபால் வாக்குகளைப் பெற தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

 

தபால் வாக்குகள் பெறும்போது வேட்பாளர்களின் பிரதிநிதிகளைக் கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், தற்போதைய நிலையில் இதுபோன்ற புதிய நடைமுறையை மேற்கொள்ள முடியாது என்றும், தொகுதியில் ஏராளமான வேட்பாளர்கள் இருப்பதால் இது சாத்தியமில்லை என்றும் தெரிவித்தார்.

 

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தபால் வாக்குகளில் முறைகேடு செய்ததாக எந்த ஒரு குற்றச்சாட்டும் இடம் தராத வகையில், அவற்றைக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய அறையில் பாதுகாக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தினர். பின்னர், திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு வழக்குகளையும் முடித்து வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர்.