தமிழ்நாடு முழுவதும் பருவ மழை பெய்துவருகிறது. குறிப்பாக, சென்னையில் சாலை எங்கும் தண்ணீர் தேங்கி நிற்கும் அளவிற்குக் கனமழை பெய்திருக்கிறது. கடந்த சிலதினங்களுக்கு முன்பாக வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று மாலை சென்னை மாமல்லபுரம் - ஸ்ரீஹரிகோட்டா அருகே கரையைக் கடந்தது.
இதனால், நேற்று சென்னையில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்றுவீசியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உட்பட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதில் ஆங்காங்கே இன்னும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை நேற்று மாலை முதல் முடிந்தாலும், இன்னும் தேங்கிய மழை நீர் வடியவில்லை இதனால், பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அந்தவகையில், சென்னை மந்தைவெளி வி.சி.கார்டன் 2வது தெருவில் மழைநீர் வடியாமல் உள்ளதால் அப்பகுதி குடியிருக்கும் பொது மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அதேபோல், அவ்வை சண்முகம் சாலை நடுக்குப்பம் அருகே சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், சென்னையில் பெய்த தொடர் மழையின் காரணமாக சென்னை மயிலாப்பூர் சித்திரை குளம் முழுவதும் மழைநீர் நிரம்பியுள்ளது. இதனை அப்பகுதியில் இருக்கும் மக்கள் ஆர்வமாக வந்து பார்த்துச் செல்கின்றனர்.