வேலூர் மாவட்டம், அரக்கோணம், சோளிங்கர், ஆர்.கே.பேட்டை பகுதிகளில் ஒரு போலீஸ் அதிகாரி டூவீலரில் வந்து அடிக்கடி பைக்குகளை மடக்கி பணம் வசூல் செய்வதாக அரக்கோணம், சோளிங்கர் போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அவரை பிடிக்க திட்டமிட்டனர்.
அதன்படி மே 15ந்தேதி மாலை அரக்கோணம் அருகே பணம் வசூலில் ஈடுபட்டிருந்த காக்கி உடையில் இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். நான் போலிஸ் அதிகாரி தான் என கெத்தாக சொல்லியவர், இதேப்பாருங்க என அடையாள அட்டை எனக்காட்டியுள்ளார். அதில் பெருமாள் என்றும், வேலூர் சப்-இன்ஸ்பெக்டர் என்கிற அடையாள அட்டையில் புகைப்படத்தோடு இருந்துள்ளது. அதன் உண்மை தன்மையை விசாரிக்க அது போலியானது என தெரிந்தபின் தீவிரமாக விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையின்போது, தனது சொந்தவூர் திருவள்ளுவர் மாவட்டம், திருத்தணி என்றும் பதிலளித்துள்ளார். தொடர்ந்து நீ என்ன வேலை செய்கிறாய் என போலிஸார் கேட்டபோது, அவர் சொன்ன பதிலைக்கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தான் திருத்தணி நகரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நிலைய அதிகாரியாக உள்ளேன் என அதற்கான அடையாள அட்டையை காட்டியுள்ளார். சந்தேகப்பட்டு அதனை விசாரித்தபோது, அவர் உண்மையில் அங்கு அதிகாரியாக இருப்பதை தெரிந்து அதிர்ச்சியாகியுள்ளனர்.
அதிகாரியா இருந்துக்கிட்டு எதுக்காக போலிஸ் அதிகாரி வேடம் போட்டீர்கள் என விசாரித்தவர்களிடம், போலீசில் தான் நல்ல வருமானம். அதனால் தான் நிலைய அதிகாரி வேலை முடிந்ததும், போலிஸ் ட்ரஸ் போட்டுக்கொண்டு மாமூல் வசூல் செய்தேன் என்றுள்ளார். உடனே இதுப்பற்றி வேலூர் எஸ்.பி பர்வேஷ்குமாருக்கு தெரிவித்துள்ளனர். வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் இருந்து திருவள்ளுவர் மாவட்ட தீயணைப்பு நிலைய உயர் அதிகாரிகளிடம் விவரத்தை கூறியுள்ளனர்.