போடி தொகுதியில், கொட்டகுடி கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் டாப்டேஷன், சென்ட்ரல் மலை கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால் குரங்கணியிலிருந்து 13 கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் செல்ல வேண்டும். தற்போது உள்ள இக்கட்டான சூழ்நிலையால் தமிழக, கேரள எல்லைப்பகுதிகள் அடைக்கப்பட்டுள்ளன.
ஆனால் போடியிலிருந்து கேரளா மாநிலத்திற்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் என அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மனிதாபிமான அடிப்படையில், தமிழக எல்லைகளில் தாராளமாக தடையின்றி அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் அரசு கரோனா நிவாரண பொருட்களான அரிசி, பலசரக்கு, காய்கறிகளை டாப்டேஷன், சென்ட்ரல் மலைக்கிராம மக்கள் 250 பேர்களுக்கு வழங்க இரண்டு டெம்போக்களில் ஏற்றி கொண்டு போடியிலிருந்து, போடிமெட்டு தமிழக எல்லை அடைந்தனர்.
கேரளா எல்லைக்குள் நுழைய முயன்றபோது, போடி தாசில்தார் மணிமாறன், தேனி தாசில்தார் குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர்களை கேரளா மாநில போலீசார் இடுக்கி மாவட்ட கலெக்டரின் அனுமதி கடிதம் உள்ளதா என கேட்டனர். இல்லையென்றதால் தமிழக அதிகாரிகளை உள்ளே துழைய விடாமல் திருப்பி அனுப்பிவிட்டனர்.
டாப்டேஷன், சென்ட்ரல் மலைக் கிராமங்களில் உள்ள தமிழ மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என அதிகாரிகள் எவ்வளவோ கேட்டு பேசி முயற்சித்தும் அவர்கள் அனுமதிக்க மறுத்து விட்டனர். அதனால் நிவரணப் பொருட்கள் வாகனங்கள் அப்படியே போடி மெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் டென்ஷன் அடைந்த தமிழக அதிகாரிகள் கேரளா செல்கின்ற வாகனங்களை போடி முந்தல் மற்றும் போடி மேட்டிலும் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் தமிழக, கேரள எல்லையில் பதட்டம் நிலவி வருகிறது.