உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை இந்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதனால் மாநில எல்லைகள் மற்றும் மாவட்டம் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தான் ஒவ்வொரு மாவட்ட எல்லையிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து கடுமையான சோதனைகளுக்கு பிறகும், மாவட்ட எல்லையை கடக்க அனுமதி சீட்டு வாங்கியவர்களை மட்டும் அனுமதித்து வருகின்றனர். இதில் காய்கறி, பால், போன்ற அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு தடையில்லை.
இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் யாருக்கும் நோய் தொற்று இல்லை என்ற நிலையில் புதுக்கோட்டை- தஞ்சை மாவட்ட எல்லையான ஆவணம் கைகாட்டி யில் இரு மாவட்ட போலீசாரும் சோதனைச் சாவடி அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 50 வாகனங்கள் கூட அந்த வழியாக செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அதனால் நோய் தொற்றுகள் பரவல் தடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஆவணம் கைகாட்டி சோதனைச் சாவடியுடன் செருவாவிடுதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதரா நிலையத்தில் இருந்து வட்டார மருத்துவ அலுவலர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சோதனைச் சாவடி அருகிலேயே மருத்துவ முகாம் அமைத்து மாவட்ட எல்லையைக் கடக்க வரும் அனைவரையும் மருத்துவ பரிசோதனைகள் செய்த பிறகே அனுமதிக்கின்றனர்.
மேலும் அவர்களின் காய்ச்சல், தலைவலி, சளி இருந்தால் உடனடியாக மருந்து மாத்திரைகள் வழங்கப்படுவதுடன் மறு முறையும் வந்து பரிசோதனை செய்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு அவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை பதிவு செய்து கொண்டே அனுப்பி வைக்கின்றனர்.
இது குறித்து சோதனைச் சாவடி பணியில் இருந்த போலீசார் கூறும் போது.. "மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி இல்லை. மருத்துவமனை, பால், காய்கறி, உணவுப் பொருள், கேஸ் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கிறோம். அவர்களையும் மருத்துவ சோதனை செய்து முழு விபரங்களும் பெறப்பட்ட பிறகே அனுமதி கொடுக்கிறோம். அதனால் தேவையில்லாமல் வரும் வாகனங்கள் குறைந்துள்ளது. பல வாகனங்களை திருப்பியும் அனுப்பி உள்ளோம்" என்றார்.
இப்படி ஒவ்வொரு இடத்திலும் இருந்தால் அடுத்த இலக்காக உள்ள சமூக பரவலை தடுத்து கரோனா இல்லாத தமிழகமாக விரைவில் மாற்றிவிடலாம்.