புதுக்கோட்டையில் கோட்டாட்சியர் வாகனம் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் பலியான சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா பணி நிமித்தமாக அரசு வாகனத்தில் திருமயம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது நகரத்துப்பட்டி விளக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் சென்றபோது எதிரே வேகமாக வந்த ஒரு பைக்கில் மோதிய சம்பவத்தில் பைக்கில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அரசு வாகனத்தில் சென்ற கோட்டாட்சியர் ஐஸ்வர்யா மற்றும் வாகன ஓட்டுநர் காமராஜ் ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த இருவரும் யார் என்பது குறித்த முழு விபரம் நீண்ட நேரங்களுக்கு பிறகு தெரிய வந்துள்ளது. பீகார் மாநிலம் பங்கா பகுதியைச் சேர்ந்த முகமது பரீத் மகன் முகமது பயாஸ் (28). கடந்த 5 ஆண்டுகளாக ராமநாதபுரம் அபிராமபுரத்தில் ஒரு பள்ளிவாசலில் பாங்கு சொல்லும் மதகுருவாக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் வேலை கிடைத்துள்ளதால் சென்னைக்கு சென்றுள்ளார்.
ராமநாதபுரத்தில் நின்ற தனது பைக் மற்றும் உடைமைகளை எடுத்துச் செல்ல சென்னையில் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தனது மாமா மகன் முகமது பைசலுடன் பஸ்ஸில் ராமநாதபுரம் வந்து இருவரும் பைக்கில் சென்னை சென்றுள்ளனர். முகமது பயாஸ் பைக்கை ஓட்டியுள்ளார். பைக் நகரத்துப்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த கோட்டாட்சியர் வாகனத்தில் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போக்குவரத்தை சரி செய்தனர். பீகாரைச் சேர்ந்த மதகுருவும் கல்லூரி மாணவரும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து முறையான விசாரணை செய்து வழக்கு பதிவு செய்து பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமுமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.