தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடிய உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகள், மூன்று மாதங்களுக்குப் பின் டிசம்பர் 16-ம் தேதி முதல் மீண்டும் விசாரிக்கவுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், 2018-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஆலையை திறக்க அனுமதியளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது. அதன்படி, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு, 28 நாட்கள் விசாரணை நடத்தியது.
இந்தச் சூழ்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் நீதிபதி சிவஞானம், சுழற்சி முறையில் மதுரைக்கு மாற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து, இந்த வழக்கை மதுரைக் கிளையில் நீதிபதி சிவஞானம், தாரணி அமர்வு விசாரிக்கும் என அப்போதைய தலைமை நீதிபதி தஹில் ரமானி உத்தரவு பிறப்பித்தார். தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி ராஜினாமா செய்ததை அடுத்து, வேதாந்தா நிறுவனம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, வழக்கை நீதிபதி சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வே விசாரிக்கலாம் என பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த வினீத்கோத்தாரி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவின் அடிப்படையில், வழக்கை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வில், ஸ்டெர்லைட் வழக்குகளைப் பட்டியலிட உத்தரவிட்டதன் அடிப்படையில், டிசம்பர் 16 முதல் 20-ம் தேதி வரை இந்த வழக்குகள் விசாரிக்கப்படவுள்ளன. ஏற்கனவே, பெரும்பாலான வாதங்கள் முடிந்து விட்டதால், இந்த ஐந்து நாட்களில் வாதங்கள் முடிவடைந்து வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.