விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கை: ‘’ரஃபேல் விமான பெ ஊழலில் பிரதமர் அலுவலகம் ஈடுபட்டதும் அதனால் இந்திய அரசுக்கு நட்டம் ஏற்பட்டிருப்பதும் ஆதாரப்பூர்வமாக ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உண்மை முழுமையாக வெளிப்படுவதற்கும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கும் மீண்டும் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
ரஃபேல் விமான பேரத்தில் அதற்கென நியமிக்கப்பட்ட குழு மட்டும் தான் ஈடுபட்டது வேறு எவரும் அதில் தலையிடவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. ஆனால், மத்திய அரசு கூறியதற்கு மாறாக பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளோடு பிரதமர் அலுவலகம் பேரத்தில் ஈடுபட்டதும், அதனால் ஏற்கனவே இந்தியாவின் சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் நீர்த்துப் போகச் செய்யப்பட்டு இந்தியாவுக்கு நட்டம் ஏற்படும் நிலை உருவானதும், அதற்கு பாதுகாப்பு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்ததும் ஆவணங்களின் சான்றுகளோடு இன்றைய இந்து நாளேட்டில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை நாட்டுமக்களை மட்டுமல்ல உச்சநீதிமன்றத்தையும் மோடி அரசு ஏமாற்றி வந்திருக்கிறது என்பதை இந்த ஆவணங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
எனவே, மோடி அரசின் பொய் வாக்குமூலத்தை நம்பி முடிவெடுத்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை மறு விசாரணைக்கு எடுக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.’’