தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்த வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர்களுடன் நேற்று (28/01/2022) பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இரண்டாவது நாளாக இன்று (29/01/2022) காலை 10.00 மணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தொல்.திருமாவளவன் எம்.பி.,"நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இடப்பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு போதிய இடங்களை ஒத்துக்குமாறு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் கேட்டுள்ளோம். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வாய்ப்பு தருமாறு கேட்டுள்ளோம்.
மேயர் பதவி தர வேண்டும் எனக் குறிப்பாக தி.மு.க.விடம் கோரிக்கை வைக்கவில்லை; பொதுவாகத்தான் வைத்தோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் போட்டியிட விரும்பும் இடங்களை பட்டியலிட்டு மாவட்டந்தோறும் தி.மு.க. செயலாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. பெரியார் பிறந்த மண்ணில் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.