நீட் விலக்கை வலியுறுத்தி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்க, கையெழுத்தியக்கத்தை இளைஞரணி செயலாளர் மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் துவக்கி வைத்தார். அதன் பணிகள் தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வரும் நிலையில், இன்று கவிஞர் வைரமுத்து நீட் தேர்வுக்கு எதிராக கையொப்பமிட்டுள்ளார்.
அதற்கு முன்பு பேசிய அவர், நீட் என்பது மாணவர்களுக்கு எதிரானது; சமூக நீதிக்கு எதிரானது என்ற கருத்து நகரம் முதல் கிராமம் வரை பரவி இருக்கிறது. நீட் என்பது மாணவர்களுக்கு இழைக்கப்படுகிற கல்வி அநீதி அல்லது எதிர்கால அநீதி என்பதில் உணர்ந்தவர்கள் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஏனென்றால் நீட் தேர்வில் எழுதுகிற மாணவனுக்கு எழுதும் தேர்வில் ஒரு சமநிலை இல்லை; மாணவர்கள் தேர்வு எழுதி எழுதியே தங்களது வாழ்வில் பாதியை கரைத்து விடுகிறார்கள் என்பதை இந்த சமூகம் நினைவில் கொள்ள வேண்டும். அதனால் நீட்டுக்கு எதிராக; நீட் விலக்கிற்காக நாங்கள் இங்கே கையெழுத்திடுகிறோம்” என்றார். இதனைத் தொடர்ந்து தற்போது அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,
“‘நீட் விலக்கு நம் இலக்கு’
இயக்கத்தில் நானும்
கையொப்பமிட்டேன்.
“நீட் என்பது
கல்விபேதமுள்ள தேசத்தில்
ஒரு சமூக அநீதி என்றேன்.
நீட்தேர்வு
மருத்துவத்தில்
சேர்த்துவிடுவதற்கு மாறாகச்
சிலரை
மரணத்தில் சேர்த்துவிடுவதை
அனுமதிக்க முடியாது என்றேன்
நீட் விலக்கு மசோதாவில்
குடியரசுத் தலைவர்
கையொப்பமிட வேண்டும் மற்றும்
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு
மாற்ற வேண்டும்" என்று
கோரிக்கை வைத்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.