இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் (வயது 88) சிறுநீரகப் பிரச்சனை காரணமாக, நேற்று முன்தினம் (24/02/2021) சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
தா.பாண்டியன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தா.பாண்டியனின் எழுத்துப் பயணம்...
முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை பலரது பேச்சுகளை தா.பாண்டியன் மொழிபெயர்த்துள்ளார். ‘ஜனசக்தி’யில் 1962- ஆம் ஆண்டு எழுதத் தொடங்கிய தா.பாண்டியன், தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். ஆரம்ப காலத்தில் 'சவுக்கடி' என்ற புனைப்பெயரில் அவர் கட்டுரைகளை எழுதி வந்தார். மேலும், 8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள் உள்ளிட்டவற்றை எழுதியுள்ளார். ‘தா.பாண்டியனின் மேடைப்பேச்சு’, ‘பொதுவுடமையரின் வருங்காலம்’ போன்ற நூல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தமிழ் இலக்கியத்திலும் தனித்திறன் கொண்ட தா.பாண்டியன், குன்றக்குடி அடிகளார் போன்ற தமிழ் ஆளுமைகளுடன் மேடைகளைப் பகிர்ந்துகொண்டவர். சிறப்பான பேச்சாற்றலால் கட்சிப் பேதமின்றி பலதரப்பட்டோரின் அன்பைப் பெற்றவர் தா.பாண்டியன்.