Skip to main content

விளம்பரப்பலகை உரிமம்: அமைச்சர் வேலுமணியின் ஊழல்கள் குறித்து விசாரணை தேவை! ராமதாஸ்

Published on 26/02/2018 | Edited on 26/02/2018


 

ஆண்டுக்கு  ரூ.10,000 கோடி அளவுக்கு வணிகம் நடக்கும் விளம்பரப் பலகைகள் தொழிலை அமைச்சரின் சொந்த நலனுக்காக முடக்கி வைப்பதை அனுமதிக்கக் கூடாது. அமைச்சர் வேலுமணியின் நிறுவனங்களுக்கு சலுகை காட்டுவதால் அரசுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3750 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தப் பட்டது குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் விளம்பரப் பலகைகள் அமைக்க அனுமதி வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டும், அதை செயல்படுத்த தமிழக அரசு மறுத்து வருகிறது. ஓர் அமைச்சரின் சொந்த லாபத்திற்காக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1250 கோடி வருமானம் கிடைக்கும் தொழிலை ஆட்சியாளர்கள் முடக்கி வைப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
 

தமிழ்நாட்டில் விளம்பரப்பலகைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில் அனைத்து விளமபரப் பலகைகளையும் அகற்றும்படி 2008-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதைத்தொடர்ந்து விளம்பரப்பலகைகளை அமைப்பதற்கான புதிய விதிகளை தமிழக அரசு வகுத்தது. ஆனாலும், அதன்படி  புதிய உரிமங்கள் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்றம், தனியாருக்கு சொந்தமான இடங்களில் விளம்பரப்பலகைகள் அமைப்பதற்கு அனுமதி அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியது. விளம்பரப் பலகைகளை வழங்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதுதொடர்பான விண்ணப்பங்களை ஒற்றைச் சாளர முறையில் பெற்று, ஒரு மாதத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும் என்று கடந்த 2016&ஆம் ஆண்டு  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. ஆனால், அதன்பின் ஒன்றரை ஆண்டுகள் ஆகியும்  இதுவரை விளம்பரப்பலகைகளை அமைப்பதற்காக ஓர் உரிமத்தைக் கூட தமிழக அரசு வழங்கவில்லை. அதுமட்டுமின்றி, சென்னையில் இத்தகைய உரிமம் வழங்கும் அதிகாரம் மாநகராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

velumani


 

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் சொந்த லாபம் கருதியே விளம்பரப்பலகைகள் அமைக்க அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சென்னை மாநகரம் முழுவதும் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைத்து அவற்றில் தனியார் விளம்பரங்களை செய்து கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.  இந்த நிழற்குடை விளம்பரங்கள் அனைத்தையும் ஸ்கைராம் அட்வர்டைசிங், ஷைன் அட்வர்டைசிங், ஃபைன் ஆர்ட்ஸ் கம்யூனிகேசன்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் மட்டுமே செய்து வருகின்றன. இவை அனைத்தும் அமைச்சர் வேலுமணியின் பினாமி நிறுவனங்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் அனைத்துக்கும் தாமோதரன் சீனிவாசன் என்பவரே இயக்குனராக உள்ளார். இந்த 3 நிறுவனங்களும்  2015-ஆம் ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் 10 நாட்கள் இடைவெளியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 

தனியார் இடங்களில் விளம்பரப் பலகைகள் அமைக்க உரிமம் வழங்கப்பட்டால் அதனால் அமைச்சர் வேலுமணி பினாமி நிறுவனங்களின் வருமானம் குறைந்து விடும் என்பதால் தான், தனியார் விளம்பரப் பலகை அமைக்க அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் 2000 இடங்களில் விளம்பரப் பலகைகள் அமைக்க உரிமம் கோரப்பட்டுள்ளது. ஆனால், 2016 செப்டம்பர் மாதம் முதல்  2017 செப்டம்பர் வரை 900 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டிருப்பதாக தகவல் உரிமைச் சட்டப்படி அளித்த பதிலில் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றமே ஆணையிட்ட  பிறகும் விளம்பரப் பலகை அமைக்க உரிமம் வழங்காத தமிழக அரசு மீது சில நிறுவனங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தன. அவ்வாறு வழக்குத் தொடர்ந்த நிறுவனங்களை பழிவாங்கும் நோக்கத்துடன் அவர்களின் விண்ணப்பங்களை தமிழக அரசு நிராகரித்து விட்டதாகவும் குற்றச்சாற்றுகள் எழுந்தன.
 

தனியார் இடங்களில் விளம்பரப் பலகைகள் அமைக்க உரிமம் வழங்கப்பட்டால் சென்னையில் மட்டும்  தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் ஆண்டுக்கு ரூ.250 கோடி வருமானம் கிடைக்கும். தமிழகம் முழுவதும் ரூ.1250 கோடி வருமானம் கிடைக்கும். கடந்த 3 ஆண்டுகளில் அரசுக்கு ரூ.3750 கோடி வருவாய் கிடைத்திருக்கும். மாறாக, அமைச்சருக்கு வேண்டிய நிறுவனங்கள் அமைத்துள்ள பேருந்து நிழற்குடை விளம்பரங்களால் தமிழக அரசுக்கு சில லட்சங்கள் கூட வருவாய் கிடைப்பதில்லை. அமைச்சருக்கு நெருக்கமான நிறுவனங்கள் என்பதாலேயே அவை வரி செலுத்துவதற்கு மறுக்கின்றன. அமைச்சர் வேலுமணியின் பினாமி நிறுவனங்கள் லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக, அரசுக்கு கிடைக்க வேண்டிய ரூ.1250 கோடி ஆண்டு வருவாயை இழப்பது ஏற்கத்தக்கதல்ல; இது கண்டிக்கத்தக்கது.
 

அதுமட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் விளம்பரப் பலகைகளை அமைக்கும் தொழில் மூலமாக மட்டும் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. உரிமம் வழங்க அரசு மறுப்பதால் இந்த 5 லட்சம் பேரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு  ரூ.10,000 கோடி அளவுக்கு வணிகம் நடக்கும் இந்த தொழிலை அமைச்சரின் சொந்த நலனுக்காக முடக்கி வைப்பதை அனுமதிக்கக் கூடாது. அமைச்சர் வேலுமணியின் நிறுவனங்களுக்கு சலுகை காட்டுவதால் அரசுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3750 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தப் பட்டது குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி தனியார் இடங்களில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு அரசு உரிமம் வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்