நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மேக்கரை என்ற ஊரில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அனுமந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது அடவிநயினார் அணை. 132.2 அடியை உயரமாக கொண்ட இந்த அணை கடந்த 2013 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது.
இந்த அணையின் மூலம் 7500 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. இந்நிலையில் அந்த அணையின் மேட்டுகால் மதகு இறுகிப்போனதாக கூறப்படுகிறது. மதகு இறுகி போயுள்ளதால் ஜெசிபியை வைத்து திறக்கும் பணி நடைபெற்றது.
நொடிக்கு 50 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டது. ஆனால் பிற்பகல் வேளையில் அந்த மதகில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்த அணையில் இருந்து வாய்களில் தாழ்வான பகுதி நோக்கி சாலையில் நீர் பாய்ந்து வீணாகி வருகிறது. அணையிலிருந்து வெளியேறி சாலையில் நீர் கொட்டுவதால் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலையின் ஒருபகுதி சரிந்தது. சரிந்த சாலையில் நீர் கொட்டுவது அருவி போல் காட்சியளிக்கிறது.
அணையில் நீர் வெளியாவதை அறிந்த மக்கள் அதைக்காண அந்த பகுதியில் குவித்துள்ளனர். இதனால் ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளதால் உடைந்த மதகை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.