நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால், நேற்று காலை திடீரென கைது செய்யப்பட்டார். காரணமேதும் கூறாமல், விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அவர் மீது அரசியல் சட்டம் 124இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத், வழக்கறிஞர் பெருமாள், இந்து என்.ராம் உள்ளிட்டோரின் வாதத்தை ஏற்று, ஆசிரியர் நக்கீரன் கோபாலை கைது செய்யமுடியாது என்று தீர்ப்பளித்து விடுவித்தார். நேற்று நக்கீரன் கோபாலை சந்திக்கச் சென்று, தடுக்கப்பட்டபோது, தர்ணாவில் ஈடுபட்ட மதிமுக தலைவர் வைகோவை இன்று காலை சந்தித்து நன்றி செலுத்தினார் நக்கீரன் கோபால்.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் கைது நடவடிக்கை குறித்து விளக்கிய ஆசிரியர் நக்கீரன் கோபால், தொடர்ந்து, "கைது பண்ணி சிந்தாதிரிப்பேட்டையில் வச்சிருந்தப்போ என்கிட்ட வந்து வைகோ சார் வந்திருக்கார்னு சொன்னாங்க. எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. அரசியல் தலைவரா இல்லாம ஒரு வழக்கறிஞரா வந்திருக்கிறதா சொன்னாங்க. 'ஒரு ஆஜானுபாகுவான வழக்கறிஞர் நமக்கு ஆதரவா இருந்தா நல்லதுதானே'னு எனக்கு மகிழ்ச்சியா இருந்தது. ஆனா, நேரமாகியும் அண்ணன் உள்ள வரல. என்னனு கேட்டப்போ, "அவர் வந்துட்டு கத்திட்டு போய்ட்டாரு"ன்னு சொல்றாங்க. எனக்கு என்ன விஷயம்னு தெரில. வெளியில கோஷா ஹாஸ்பிடலுக்கு என்னை செக்-அப்க்கு கூட்டிப் போனாங்க. அங்க வந்த ஸ்டாலின் அண்ணன் சொன்னார், "வைகோ கலக்கிட்டார், தர்ணாலாம் பண்ணி பெரிய இஸ்யூ ஆக்கிட்டார்"னு சொன்னாங்க. இப்படி, இந்த நல்ல முடிவு கிடைக்க முக்கிய காரணமா, எல்லோரும் ஒற்றை கோடாக நிற்பதற்கு முதல் புள்ளியாக நின்றவர் அண்ணன் வைகோ. அவருக்கு நம்ம சார்பா, ஊடகம் சார்பா நக்கீரன் சார்பா அவருக்கு நன்றி தெரிவிக்க வந்தேன்" என்று கூறினார்.