கடலூர் செம்மங்குப்பத்திலுள்ள இரண்டு தனியார் தொழிற்சாலையில் பணி நீக்கம் மற்றும் பணியிட மாறுதல் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த வேண்டும், சிப்காட் பகுதி தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளி மாநிலத்தவரை வெளியேற்றி உள்ளூர் மக்களை பணியில் அமர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியின் தொழிலாளர் வாழ்வுரிமை சங்கம் சார்பில் கடலூர் சங்கொலிக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
த.வா.க நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், “இரண்டு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல நாட்கள் போராட்டம் நடத்தியும், தொழிற்சாலை நிர்வாகம் கண்டுகொள்ள வில்லை. மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியும் தொழிற்சாலை நிர்வாகம் உடன்படவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில், மக்களை திரட்டி தொழிற்சாலையை இழுத்து மூடும் போராட்டம் நடத்தப்படும். சிப்காட் பகுதி தனியார் தொழிற்சாலை நிர்வாகங்களும் உள்ளூர் மக்களை பணியில் அமர்த்த வேண்டும்” என்றார்.
தொடர்ந்து வேல்முருகன் தலைமையில் தொழிற்சாலையை முற்றுகையிட கட்சியினர் பேரணியாக சென்றனர். அவர்களை ஏ.டி.எஸ்.பி பாண்டியன், தாசில்தார் செல்வகுமார் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையடுத்து போராட்டக்குழுவினர் கலைந்து சென்றனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “ மதுரை மற்றும் திருச்சி கோட்டத்தில் ரயில்வே பணியிடங்களுக்கான தேர்வில் 90 சதவீதம் வடமாநிலத்தவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் 10 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏற்கனவே நடந்த ரயில்வே பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்து, மீண்டும் தேர்வு நடத்த வேண்டும். அதில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளித்து பணியில் அமர்த்த வேண்டும். இல்லையென்றால் தென்னக ரெயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தை நடத்துவோம். அதேபோல் வங்கி பணிக்கு வடமாநிலத்தை சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வாகி உள்ளனர். வருமான வரி துறையிலும் வடமாநிலத்தை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வாகி உள்ளனர். நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திலும், பரங்கிப்பேட்டையில் உள்ள மின் ஆலையிலும், கடலூர் சிப்காட் தனியார் தொழிற்சாலைகளிலும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான வடமாநிலத்தை சேர்ந்தவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 1 கோடி இளைஞர்கள் வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் என்ன பதில் சொல்ல போகிறது. தமிழக அரசு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.