சிவகாசியில் ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மதுரையில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் 10 லட்சம் பேரைத் திரட்ட வேண்டும் என்பதே, ஆலோசனைக் கூட்டத்தின் நோக்கமாக இருந்தது.
மாநாட்டைப் பார்த்து மாற்றான் பயப்படவேண்டும்!
அந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி “கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை அழைத்து வரும்போது பாதுகாப்பாக அழைத்து வரவேண்டும். இ.பி.எஸ். எண்ணமும் அதுதான். யாரும் காரசாரமாக கோஷம் போடக்கூடாது. நியாயமாக, தர்மமாக நம்முடைய இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும். இ.பி.எஸ். மீண்டும் முதலமைச்சராக வேண்டும். மாநாடு வெற்றி பெற வேண்டும். அதற்குத் தேவையான கோஷங்களை எழுப்பி, நம்மைக் கண்டு மாற்றான் பயப்படக்கூடிய அளவில், நாம் சந்தோசப்படக்கூடிய அளவில், நம்முடைய ஊர்வலமும் மாநாட்டுக்குச் செல்கின்ற பாங்கும் இருக்க வேண்டும். இதைத்தான் இ.பி.எஸ்.ஸும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.” என்றார்.
மோடி கூட்டத்தில் இ.பி.எஸ்.ஸுக்கு 2-வது இடம்!
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேசியபோது “அதிமுக அடுத்த 100 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்ற சொன்ன ஜெயலலிதாவின் வாக்கை மெய்ப்பிக்க வேண்டுமென்றால், நாம் சிறப்பாகச் செயல்பட வேண்டும். அந்தக் கூட்டணியில் மு.க.ஸ்டாலினுக்கு உள்ள முக்கியத்துவத்தை விட, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, மோடி முக்கியத்துவம் அளித்துள்ளார். மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி 2-வது இடத்தில் அமர்ந்தார்.” எனப் பேசினார்.
ஜெயலலிதா ஜெயிலுக்குப் போனதற்கு யார் காரணம்?
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய போது “ஓ.பன்னீர்செல்வமும் டி.டி.வி. தினகரனும் சாதி அரசியல் பண்ணுகிறார்கள். ஜாதி அரசியல் செய்யும் டிடிவி தினகரனு்ககு, எம்எல்ஏ தேர்தலில் கோவில்பட்டி தொகுதி மக்கள் நல்ல பாடம் புகட்டி அனுப்பினார்கள். ஓபிஎஸ்சும் டிடிவியும் சேர்ந்து எம்பி தேர்தலைச் சந்திக்கப்போகின்றார்களாம். உள்ளுரில் விலைபோகாத மாடு இது. தஞ்சாவூரில் நீங்கள் நின்று பாருங்கள். உங்கள் ஜாதிக்காரர்கள் உங்களுக்கு ஓட்டு போடுவார்களா? என்று பார்ப்போம். தென் மாவட்ட மக்களை இழிச்சவாயர்கள் என்று இரண்டு பேரும் நினைக்கின்றார்களா? திண்டுக்கல்லில் டிடிவி தினகரன் நிறுத்திய வேட்பாளர் டெபாசிட் இழந்தார். மகாத்மா காந்தி பேரன் போல ஸ்டாலி்ன் பேசுகிறார். லஞ்சமோ, ஊழலோ அவர்கள் பார்த்ததே இல்லாதது போல.. லஞ்சமோ, ஊழலோ செய்யாதது போல பேசுகிறார். தினகரன் குடும்பம் கட்சியிலிருந்து கொள்ளையடித்ததால் ஜெயலலிதாவுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு ஜெயிலுக்குப் போகவேண்டியிருந்தது” என்றார்.
சிங்கம் வந்துவிட்டது!
முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியபோது “இங்கே சிங்கக்குரலாக, சிம்மக்குரலாக ஒலிக்கின்ற குரல் குறைந்து போச்சே என்று நினைத்தேன். அதற்குள் ஒரு சிங்கம் இங்கே வந்துவிட்டது. அது சி.வி.சண்முகம் என்பது எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் நன்றாகத் தெரியும்” என்றார்.
வடிவேலு காமெடி பண்ணும் ஓ.பி.எஸ்.!
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியபோது “தனக்கு பெரும்பான்மையான ஆதரவு உள்ளதாகக் கூறினார் ஓபிஎஸ். அதிமுக நிர்வாகிகள் இபிஎஸ்-ஐ மட்டுமே ஏற்றுக் கொள்வதாகக் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறார். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவை பொதுச்செயலாளர் எடப்பாடிதான். எடப்பாடி அணிதான் அதிமுக எனக் கூறியுள்ளது. அதனையும் ஏற்றுக்கொள்ளாத ஓபிஎஸ், தற்போது தொண்டர்கள் ஆதரவு எனக்கு மட்டும்தான் உள்ளது என்கிறார். இவர் இப்படி பேசுவது இயக்குனர் சுந்தர். சி-யிடம் தெருவுக்கு வா பார்த்துக் கொள்வோம், வீட்டுக்கு வா பார்த்துக் கொள்வோம் என்று வடிவேலு பேசும் காமெடி போல இருக்கிறது. எதிரிகளுக்கு நம்மைப் பற்றி தெரியும். அதிமுகவை அழித்துவிடலாம் என்று நினைக்கும் பச்சோந்திகளுக்கும், துரோகிகளுக்கும் எதிரானது இந்த மாநாடு என்பதை நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்” என்றார்.
தக்காளியைக் கையில் வைத்துக்கொள்ளுங்கள்!
முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசியபோது “மாநாட்டுக்கு பெண்களை அழைப்பதற்கு சிரமப்பட வேண்டியதில்லை. தக்காளியைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வெங்காயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கரண்ட் பில்லை எடுத்துக்கொண்டுபோய் காட்டுங்கள். அண்ணன் இ.பி.எஸ். முதலமைச்சராக இருக்கும்போது கரண்ட் பில் எவ்வளவு வந்தது? இப்போது எப்படி உள்ளது? என்று கூறுங்கள். சொத்து வரி ரசீதை வைத்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் எடுத்து வரிசையாகப் பின் பண்ணி எடுத்துக்கொண்டு போய் காண்பித்து மாநாட்டுக்கு கூப்பிடுங்க” என்றார்.
படிக்காமலே பாஸ்!
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியபோது “மாணவர்கள் படிக்காமலே பாஸ் பண்ணலாம். பாஸ் பண்ணவைக்க முடியும் என்பதை இபிஎஸ் செய்தார்” என்றார்.
இருக்கன்குடி மாரியாத்தாவைத் தெரியும்; ஜெயலலிதாவைத் தெரியும்!
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியபோது “100 ஏக்கரில் இடம் பிடிப்பதற்கு இபிஎஸ், தலைமை கழகத்தினுடைய நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். 100 ஏக்கரில் அங்கு விரிவான ஏற்பாடெல்லாம் செய்துவைத்திருந்தோம். வாகனங்கள் பார்க்கிங் செய்வதற்கு 200 ஏக்கர் செய்து வைத்திருந்தோம். கடந்த இரண்டு நாட்களாக வந்த தகவலைப் பார்த்து நமது பொதுச்செயலாளர் இபிஎஸ், ‘100 ஏக்கர் பத்தாது. 1000 ஏக்கர் வேண்டும்’ என்றார்.
முதன்முதலில் சட்டசபைக்குள் நுழைவதற்கு எனக்கு வாய்ப்பளித்தது விருதுநகர் மாவட்டம். ‘நீங்க சாத்தூருக்கு போங்க, நீங்கதான் பொறுப்பாளர்.’ என்று ஜெயலலிதா சொன்னார். அவரிடம் நான் ‘இருக்கன்குடி மாரியாத்தா தெரியும், உங்களைத் தெரியும்.’ என்றேன். பிறகு ஏன் தேர்தலில் நிற்பதற்குப் பயப்படுகிறாய்?’ என்று கேட்டார். நான் ‘இல்லம்மா.. பயப்படலைமா.’ என்றேன். மறுபடியும் ஏழு தடவை கேட்டார். மறுபடியும் ஏழு தடவை அதே பதிலைச் சொன்னேன். ‘எப்படி ஜெயிப்பீங்க?’ என்று கேட்டார். உங்க பெயரைச் சொன்னால் நான் ஜெயிச்சிருவேன்.’ என்று சொன்னேன். அதுதான் சாத்தூரில் நடந்தது” என்றார்.
ஆலோசனைக் கூட்டத்தில் மைக் பிடித்த நிர்வாகிகள் அனைவரும் ஜாலி மூடில் வெளிப்படையாகப் பேசினார்கள்.