இந்திய அரசின் தேசிய கடல் வளத்துறை தொழில்நுட்ப கழகம் மற்றும் கடல் மிதவைத் திட்ட குழுமத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் சார்பில், கஜா புயலில் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதி விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் மா, பலா, கொய்யா, தேக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. குழுமத்தின் திட்ட இயக்குநரும், முதுநிலை விஞ்ஞானியுமான முனைவர் இரா.வெங்கடேசன் தலைமையில், அருள் முத்தையா, ஜி.வெங்கடேசன், திருமுருகன், சுந்தரவடிவேல், முத்துக்குமார், துறையூர் தென்னவன் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் சுற்றியுள்ள கிராமங்களும் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில், இந்திய அரசின் தேசிய கடல் வளத்துறை தொழில்நுட்ப கழகம் மற்றும் கடல் மிதவைத் திட்ட குழுமத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் சார்பில் மாணவ, மாணவிகள் மற்றும் தென்னை விவசாயிகளுக்கு சுமார் 4 ஆயிரத்து 300 தென்னங்கன்றுகள், மரக்கன்றுகள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் இரா.ராஜலிங்கம் தலைமை வகித்தார். ஆயுள் காப்பீட்டு நிறுவன முகவர் எம்.ராமசாமி, நூலகர் ஸ்ரீ வெங்கட்ரமணி, ஓய்வு ஆநிரியர் வேலு, பசுமை ராமநாதன், முன்னால் ஊராட்சிமன்றத் தலைவர் சுந்தராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். நிறைவாக பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் ச.இளையராஜா நன்றி கூறினார்.
இதே போல் விஞ்ஞானிகள் குழு சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த துறையூர், வீரியங்கோட்டை, முடச்சிக்காடு, குருவிக்கரம்பை ஆகிய இடங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குழுமத்தின் திட்ட இயக்குநரும், முதுநிலை விஞ்ஞானியுமான முனைவர் இரா.வெங்கடேசன் கூறுகையில், ”எங்கள் விஞ்ஞானிகள் சார்பில் பசுமை பூமி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை எங்கள் ஏற்பாட்டில் புயல் பாதித்த பகுதிகளில் 10 கிராமங்களில், 3 ஆயிரம் குடும்பங்களுக்கு 7 ஆயிரத்து 800 தென்னங் கன்றுகள், 3 ஆயிரத்து 200 பலவகை மரக்கன்றுகளை, கடந்த டிசம்பர் .1 முதல் இதுவரை 5 முறை வழங்கப்பட்டு, சுமார் 100 ஏக்கர் நிலத்தில் நடவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மரக்கன்றுகள் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம்” என்றார்.