திருச்சி மண்ணச்சநல்லூர் தொகுதியில் இன்று (26.05.2021) 18 முதல் 45 வயதுடையவா்களுக்கான தடுப்பூசி முகாமை எம்.எல்.ஏ கதிரவன் திறந்துவைத்தார். தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் துவங்கப்பட்டுள்ள நிலையில், இன்று திருச்சியில் மொத்தம் 8 மையங்களில் முகாம்கள் நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 18 வயது முதல் 45 வயதுவரை உள்ளவா்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முகாமை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினா் கதிரவன் திறந்துவைத்தார்.
இன்று மட்டும் 300 பேருக்குத் தடுப்பூசிகள் போட திட்டமிட்டுள்ளதாகவும், மருந்துகளின் வருகையைப் பொறுத்து தினமும் பொதுமக்களுக்குத் தடுப்பூசிகளைப் போட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனா். மேலும், மண்ணச்சநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் தயார்நிலையில் இருந்த நடமாடும் காய்கறி வாகனங்களைத் துவங்கிவைத்தார். தமிழகம் முழுவதும் நேற்று நடமாடும் காய்கறி வாகனங்கள் பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று விற்பனை செய்யும் திட்டத்தை நேற்று வேளாண்மைத்துறை அமைச்சர் துவங்கிவைத்த நிலையில், இன்றுமுதல் புறநகர் பகுதிகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
தொடர்ந்து பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப முதற்கட்டமாக இரண்டு வண்டிகளும், கூடுதலாக வண்டிகள் இயக்கவும் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 14வது வார்டில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டுவந்த குடிநீர் கிணறு பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக தேர்தல் பிரச்சாரத்தின்போது பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அந்தக் கிணற்றை முழுமையாக சுத்தம் செய்து அதற்கான பாதுகாப்பு வசதிகளை உடனடியாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.