நாகை மாவட்டம் தென்னிலங்குடியில் அட்டகாசம் செய்யும் ஒற்றை ஆண் குரங்கின் தொந்தரவு தாங்காமல் ஊரே பெட்டி , படுக்கையுடன் வீடுகளை காலி செய்துகொண்டு கோவிலில் தஞ்சமடைந்த சம்பவம் நடந்துள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த காரைமேடு ஊராட்சி தென்னலங்குடி கிராமத்தில் கன்னிகோயில் தெருவில் அண்மையில் புகுந்த ஒற்றை ஆண் குரங்கொன்று வீடுகளில் புகுந்து உணவு பொருட்களை சாப்பிட்டதோடு மட்டுமல்லாமல் சாலையில் வருவோர் போவோரை கொடூரமாக கடித்து தாக்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரை அந்த குரங்கு கடித்ததால் அந்த மூதாட்டி மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்பட்டு சுயநினைவின்றி இருக்கிறார்.
அதேபோல் அப்பகுதியிலுள்ள பல பேரை அந்த ஒற்றை குரங்கு தாக்கியுள்ளது. வனத்துறைக்கு தகவல் கொடுத்தும் குரங்கு இதுவரை பிடிக்கப்படவில்லை. வனத்துறை தரப்பு கூறும்பொழுது, பலமுறை கூண்டுவைத்தும் அந்த குரங்கு பிடிபடவில்லை ஆனாலும் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். குரங்கை பிடிக்க சிறப்பு நிபுணர் குழுவை வரவைத்துள்ளோம் என கூறுகிறது.
இந்நிலையில் குரங்கின் தொல்லை தாங்காத அப்பகுதி மக்கள் பெட்டி படுக்கை என அவர்களது உடமைகளுடன் சுமார் 1000 பேர் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளனர். அந்த கொடிய குரங்கை பிடிக்கும் வரை வீட்டுக்கு வரமாட்டோம் எனவும் கூறியுள்ளனர்.
அந்த குரங்கு மனிதர்கள் யாராலோ பிடிக்கப்பட்டு ரொம்ப நாட்கள் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு தப்பித்திருக்கலாம் எனவேகூட மனிதர்கள் மீதான கோபத்தால்கூட இப்படி தொடர் தாக்குதலை மக்கள் மீது ஏற்படுத்தியிருக்கலாம் எனவும் வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
.