பலருக்கும் மனவலியை ஏற்படுத்தியிருக்கும் ஒரு விவகாரத்திற்குள் நுழைவதற்கு முன்பாக, சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்!
மதுரை மாவட்டம் சமயநல்லூரில் மாஷா அறக்கட்டளையானது நியோமி அன்பு இல்லத்தை நடத்திவருகிறது. அங்கு ஆதரவற்ற நிலையிலுள்ள 34 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்படி ஒரு இல்லம் ஆரம்பிக்கும் எண்ணம் தனக்குள் உருவானதன் பின்னணியைச் சொல்கிறார் அதனை நிர்வகித்துவரும் சூசைப்பிரகாசம். “இந்தியாவில் மிகவும் பாதிப்புக்கு ஆளாகிவருபவர்களாக பெண்கள் உள்ளனர். பெண்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதியானது நம் தேசத்தில் பரவலாக உள்ளது. அதனாலேயே, சிறுமிகளுக்காக இப்படி ஒரு இல்லத்தைத் தொடங்கினேன்.” என்கிறார்.
‘படிப்பது ராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில்’ எனச் சொல்வதுபோல, நியோமி அன்பு இல்லத்தில், ஏடாகூடமாக என்னென்னவோ நடந்து தொலைத்திருக்கிறது. அதனால்தான், அந்த இல்லத்தின் இன்னொரு நிர்வாகியான ஆதிசிவன் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்திருக்கிறார் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரான கிரேஸ் ஷோபியாபாய்.
ஆதிசிவன் கைதான பின்னணி இது -
ஆதிசிவன் அவ்வில்லத்தில் படித்துவரும் சிறுமிகள் நால்வரிடம் அத்துமீறி நடந்துகொண்டது, மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் வரை புகாரானது. உடனே, குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம், நியோமி அன்பு இல்லத்துக்கே வந்து மாணவிகள் அனைவரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது, பாதிக்கப்பட்ட நான்கு மாணவிகளும், இல்லத்தின் அலுவலகத்தில் வைத்து ஆதிசிவன் தங்களை எவ்வாறு தொந்தரவு செய்தார் என்பதையும், வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதையும் அழுதபடி கூறியிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து, சண்முகம் அளித்த புகாரை விசாரித்து, ஆதிசிவனைக் கைது செய்திருக்கிறது காவல்துறை.
நியோமி அன்பு இல்லத்தின் நிர்வாகி சூசைப்பிரகாசத்திடம் நடந்த அத்துமீறல் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அந்த 4 மாணவிகளும் மதுரை – முத்துப்பட்டியிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மற்ற மாணவர்களை வேறு காப்பகங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
சமயநல்லூர் வட்டாரத்தில் “34 குழந்தைகளின் அப்பா என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் சூசைப்பிரகாசம், மற்ற காப்பகங்களிலிலிருந்து இருந்து இது வேறுபட்டது என்பார். எப்படியென்றால், வெளிநாட்டு நிதி உதவியை நம்பாமல், தன் சொந்த முயற்சியால் நடத்தப்படும் இல்லம் எனச் சொல்வார். அன்பு இல்லம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் என்று அப்போது அவர் கூறியதென்னவோ நன்றாகத்தான் இருந்தது. ஆனால், ஆதிசிவனால் அங்கு நடந்த செயல் கொடூரமானதாக அல்லவா இருக்கிறது?” என்கிறார்கள் ஆதங்கத்துடன்.
அனாதை சிறுமிகளுக்கு ஆதரவளிக்கிறோம் என்ற போர்வையில், காப்பக சுவர்களைத் தாண்டி தங்களின் அத்துமீறல் வெளியில் வராது என்ற நினைப்பில், ஒருசிலர் வெறிகொண்ட மனித மிருகங்களாக நடந்துகொள்வது கொடுமையானது! அத்தகையோருக்கு, ‘தண்டிக்கப்படுவோம்’ என்ற அச்சத்தை, இதுபோன்ற கைது நடவடிக்கைகள் ஏற்படுத்தும் என்று நம்புவது மட்டுமே தற்காலிக ஆறுதலாக உள்ளது.