வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதா என்று தொடர்ந்து கண்காணிப்பு பணி மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் சித்தோடு அருகே உள்ள சாலை போக்குவரத்து கல்லூரியில் உள்ள அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் பெண் தாசில்தார் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு சென்று வந்த சம்பவத்திற்குப் பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் பதிவான வாக்கு இயந்திரங்கள் தொடர்ந்து அந்தந்த தேர்தல் அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
இந்தநிலையில் தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக ஈரோடு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான கலெக்டர் கதிரவன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கல்லூரிக்கு நேரில் சென்று அந்த அறைகள் பாதுகாப்பாக உள்ளதா என்பதை பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உட்பட அரசு அதிகாரிகள் சென்று வந்தனர். அந்தபகுதியில் பணிபுரியும் துணை ராணுவப் படையினர், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் அடையாள அட்டையுடன் பணிபுரிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டார்.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ளப்படும் என கலெக்டர் கதிரவன் கூறினார்.