Skip to main content

’இந்தியாவில் சிறந்த மாநிலமாக உள்ளது தமிழகம்’ - உ.வே.சா. கடிதக் கருவூலம்  நூல் வெளியீட்டு விழாவில் பன்வாரிலால் பேச்சு

Published on 13/07/2018 | Edited on 14/07/2018
pan

 

தமிழ் தாத்தா என்று போற்றப்படும் உ.வே.சாமிநாதையர் தமிழ் இலக்கிய நூல்களை உருவாக்கி உலகிற்கு தந்து பாராட்டு பெற்றவர். ஓலைச்சுவடிகள் மூலம்  படைக்கப்பட்ட சீவக சிந்தாமணி முதல் குறுந்தொகை வரையிலும் எட்டுத்தொகை மற்றும் பத்துபாட்டு, பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் சீவக சிந்தாமணி  உள்ளிட்ட எண்ணற்ற படைப்புகளை எளிய இலக்கிய நடையில் தமிழில் நூலாக வெளியிட்டு தமிழக்கு பெருமை சேர்த்தவர் உ.வே.சா.

 

அவரிடமிருந்த ஓலைச் சுவடிகள் மற்றும்  நூல்களைக் கொண்டு சென்னை கலாஷேத்ராவில் டாக்டர் ருக்மணி என்பவரால் நூல்நிலையம்  தொடங்கப்பட்டது. 1943 ம்ஆண்டு அந்த நூலகத்திற்கு உ.வே.சா பெயர் சூட்டப்பட்டது. அந்த நூலகத்தின் தலைவராக தற்போது வேலூர் விஐடி  பல்கலைகழக வேந்தர் ஜி.விசுவநாதன் பொறுப்பு வகித்து வருகிறார். டாக்டர் உ.வே.சாமிநாதைய்யர் நூல்நிலையத்தின் 75ம்  ஆண்டு நிறைவு விழா ( பவள விழா ) மற்றும் உ.வே.சாமிநாதைய்யர் கடித கருவூல நூல் வெளியீட்டு விழா 13.07.2018 ந்தேதி மாலை  சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.

 

டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையமும் , சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையும் இணைந்து  ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சிக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ப.துரைசாமி தலைமை வகித்தார்.இவ்விழாவில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உ.வே.சா கடிதக் கருவூலம் நூலினை வெளியீட்டார்.  நூலின் முதல் பிரதியினை விஐடி வேந்தரும் உ.வே.சாமிநாதைய்யர் நூலகத்தின் தலைவருமான டாக்டர் ஜி.விசுவநாதன் பெற்றுக் கொண்டு பேசும்போது, 

87 ஆண்டுகள் தமிழுக்காக வாழ்ந்து மறைந்த உ.வே.சாவை நினைவு கூறும் வகையில் அவருக்கு வந்த கடிதங்களை நூலாக வெளியிட்டு அவருக்கு பெருமை சேர்த்துள்ளோம். அவருக்கு தமிழ் மொழியில் மட்டுமின்றி கிரேக்கம், லத்தீன் இபுரு,  சமஸ்கிருதம் உள்ளிட்ட  7  மொழிகளில் அவரது தமிழ்ச் சேவையை பாராட்டி மன்னர்கள், நீதியரசர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் தமிழ் பற்றாளர்கள் உள்ளிட்டவர்கள் எழுதிய 3067 கடிதங்களை கொண்டதாக இந்த நூல் கடித கருவூல நூலாக அமைந்துள்ளது.

 

உலகில் 90 நாடுகளில் 12 கோடி தமிழர்கள் உள்ளனர். இதில் 30 நாடுகளில்  தமிழர்கள் கணிசமாக உள்ளனர். இவர்களுக்கு தமிழ் கற்று கொள்ள ஆர்வம் இருந்தும் கற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். எனவே மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து அந்த நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு திறமையான ஆசிரியர்கள் மூலமாக தமிழ் கற்று தர ஏற்பாடு செய்ய வேண்டும்.

 

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் பதவி ஏற்கும்போது தேவ நாகரிக மொழியில் கையொப்பமிடவேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிகிறேன். நாட்டில் பல்வேறு மொழி பேசுபவர்கள் உள்ளனர். அங்கிகரிக்கப்பட்ட மொழிகளாக 22 மொழிகளாக உள்ளன தேவநாகரிக மொழியில் கையொப்பமிட வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. எனவே இதனை கைவிட்டு அங்கிகரிக்கப்பட்ட மொழிகளில் கையொப்பமிட ஏற்பாடு செய்ய வேண்டும்  மேலும் உலக முழுவதிலும் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்புரை ஆற்றுகையில், தமிழ் மொழி இனிமையானது எனவே நான் தமிழையும் தமிழ் நாட்டையும் விரும்புகிறேன். இந்தியாவில் சிறந்த மாநிலமாக உள்ள தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றுள்ளதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

 

உ.வே.சா தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுகிறார். அவர் தமிழ் மொழிக்காக ஆற்றிய பணிக்காக அவ்வாறு அழைக்கப்படுகிறார். கடந்த நூற்றாண்டில் அவர் தமிழுக்கு ஆற்றிய சேவையை இப்போது நாம் பெருமை கொள்கிறோம் என்றார்.

சார்ந்த செய்திகள்