சேலம் அருகே, லாரி அதிபரை வெட்டிக்கொல்ல முயன்ற வழக்கில் இரண்டு ரவுடிகள் சேலம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (செப். 12) சரணடைந்தனர்.
சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). லாரி உரிமையாளர். கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு காரிப்பட்டி அருகே உள்ள குள்ளம்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர், திடீரென்று ரமேஷை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவருடைய உடலில் 36 இடங்களில் வெட்டு விழுந்தது.
ஆபத்தான நிலையில் இருந்த அவர், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து, காரிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். நிகழ்விடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், காரிப்பட்டியைச் சேர்ந்த ரவுடிகள் விஜயன் என்கிற விஜி, மோகன் ஆகியோர் வியாழக்கிழமை (செப். 12), லாரி அதிபரை வெட்டிக்கொல்ல முயன்ற சம்பவத்தில் காவல்துறை தங்களை தேடி வருவதாகக்கூறி, சேலம் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தனர். இருவரையும் சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் சிவா உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரையும் விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். லாரி அதிபரை வெட்டிக்கொல்ல முயன்றது ஏன் என்பது குறித்த விவரங்கள் விசாரணையின்போது தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.