திமுகவில் உள்ள இளைஞர் அணியின் மாநில இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் உதயநிதிஸ்டாலின். அவர் அதிகாரப்பூர்வமாக கட்சி பதவிக்கு வந்தபின் நடைபெறும் தேர்தல் என்பது வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலாகும்.
இந்த தொகுதிக்கான பிரச்சாரத்தில் உதயநிதிஸ்டாலின் கலந்துக்கொள்வது என்பது சந்தேகமாக இருந்துவந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார், திமுக பொருளாளர் துரைமுருகன் மகனும், திமுக வேட்பாளருமான கதிர்ஆனந்த் வெற்றி பெறக்கூடாது என உதயநிதிஸ்டாலின் நினைப்பதால் தான் அவர் பிரச்சாரத்துக்கு வரவில்லை என்றார் தேர்தல் களத்தில்.
இந்நிலையில் 3 நாள் பிரச்சாரமாக வேலூருக்கு வந்துள்ளார் உதயநிதி. ஜீலை 29ந்தேதி காலை வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் உதயநிதி. தொகுதி பொறுப்பாளரான முத்துச்சாமியுடன், தொகுதியில் உள்ள பல கிராமங்களுக்கும் சென்று கிராமப்புற மக்களிடம் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த்துக்காக வாக்கு கேட்டார்.
கலைஞரின் பேரன் வந்துள்ளேன், தளபதி ஸ்டாலின் மகன் வந்துள்ளேன், உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனக்கேட்டு வந்துள்ளேன் என பிரச்சாரம் செய்தார். வயல் வெளிகளில் வேலை செய்யும் பெண்களிடம் சென்று வாக்குகேட்டவர், அப்போது அவர்கள் சொன்ன குறைகளையும் கேட்டவர், திமுக ஆட்சி வந்ததும் இவைகளை தலைவர் ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்றார்.
அம்பலூர் என்ற பகுதியில் உதயநிதியின் பிரச்சார வேன் வந்தபோது, தென்னந்தோப்பு ஒன்றில் ஆயிரக்கணக்கான தேங்காய் வைக்கப்பட்டிருந்தது. அதனை தொழிலாளர்கள் தேங்காயின் மட்டையை உரித்துக்கொண்டு இருந்தனர். அதனைப்பார்த்து வியந்த உதயநிதி, அந்த தொழிலாளியிடம் எப்படி தேங்காய் மட்டையை உரிக்க வேண்டும் என கேட்டு அதன்படியே செய்தார்.