கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், சென்னை ஐஐடியில் முதலமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை (9 ஆம் தேதி) விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், மாணவியின் இறுதிச் சடங்குகள் முடிந்தது. இதன் பின்னர், மாணவியின் செல்போனை ஆராய்ந்தபோது அதில், தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என்பவர்தான் காரணம் என மாணவி செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார்.
அந்த செல்போன் பதிவில், மேலும் இரண்டு பேராசிரியர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து மாணவியின் தற்கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஐஐடி மாணவர் சங்கத்தினர் சென்னை ஐஐடி முன்பு இந்த சம்பவத்தில் உள்ள உண்மையை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காவல் உதவி ஆணையர் சுதாகர் இது தொடர்பாக ஐஐடி வளாகத்தில் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விசாரணையில் ஈடுபட்டார். இதுவரை 4 பேராசிரியர்கள் உட்பட 22 பேரிடம் விசாரணை நடைபெற்றிருப்பதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளது.
விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசுகையில், மாணவி பாத்திமா லத்தீப் இறந்தது சென்சிடீவ் விஷயமாக உருவெடுத்துள்ள நிலையில் இது தொடர்பாக சம்பவம் இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டோம். தற்போது இந்த வழக்கை லோக்கல் காவல்துறை விசாரணையில் இருந்து மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றுகிறோம். இந்த வழக்கை விசாரிக்க அடிஷனல் கமிஷனர் ஆப் சென்ட்ரல் க்ரைம் பிரான்ச் தலைமையில் ஒரு சிறப்பு குழு உருவாக்கப்படவுள்ளது. புலன் விசாரணை அதிகாரியாக மெஹலினா தொடர்வார்கள். விரைவில் புலன் விசாரணையை முடித்து உண்மையை வெளிக்கொண்டுவர முயற்சி எடுக்கப்படும் என்றார்.
மேலும், பேராசிரியர் பெயர் ஒன்று அடிபடுகிறதே அவரிடன் புலன் விசாரணை நடைபெற்றதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு,
புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் புலன் விசாரணை குறித்த எந்த தகவலும் இப்பொழுது வெளியே சொல்ல முடியாது என்றார்.