ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி என அடுத்தடுத்து விழாக்கள் நெருங்கி வரும் நிலையில், ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து கும்பலால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால் ரவுடிகளை முன்னெச்சரிக்கையாக கைது செய்வதில் சேலம் மாநகர காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது.
இதையடுத்து, சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவின்பேரில், சனிக்கிழமை (அக். 24) ஒரே நாளில் ஒட்டுமொத்த மாநகர காவல்துறையினரும் ரவுடிகள் வேட்டையில் களமிறங்கினர். திடீர் வேட்டையில் 37 ரவுடிகள், 5 தலைமறைவு குற்றவாளிகள், பிடி ஆணை நிலுவையில் உள்ள 2 குற்றவாளிகள் உள்பட 56 பேரை கைது செய்தனர்.
இவர்களில், பலர் பல்வேறு குற்றச் செயல்களுக்காக அடிக்கடி கைது ஆனவர்கள். சேலம் நகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் கார்த்தி, சுகேல், ஹேமதி என்கிற ஹேமதி உசேன், வெள்ளையன் என்கிற பைரோஸ்கான், செவ்வாய்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சித்தேஸ் என்கிற சித்தேஸ்வரன், ரமணி, காஜா என்கிற பொது காஜா, அன்னதானப்பட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ரவுடிகளான ஜடேஜா என்கிற தியாகராஜன், சுரேஷ், அஸ்தம்பட்டி சரகத்திற்கு உட்பட்ட ரவுடிகளான மணி என்கிற கேரளா மணி, துரை என்கிற பெரிய துரை, வீராணம் சரகத்திற்கு உட்பட்ட குட்டி என்கிற மோகன்குமார், அழகாபுரம் சரகத்திற்கு உட்பட்ட உலகநாதன், ஆழி என்கிற ராமச்சந்திரன்;
பள்ளப்பட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட மணிகண்டன், மாணிக்கராஜ், சூரமங்கலம் சரகத்திற்கு உட்பட்ட வசந்த், ராஜா, இரும்பாலை சரகத்திற்கு உட்பட்ட விஜியன் என்கிற விஜயகுமார், காவேரி, கருப்பூரைச் சேர்ந்த சூர்யா ஆகிய ரவுடிகளை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக யாரேனும் செயல்படுவதாக தெரிய வந்தால், அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சேலம் மாநகர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் யாருக்கேனும் ரவுடிகளால் அச்சுறுத்தல், மிரட்டல் இருப்பின் அதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட காவல்நிலையம் மற்றும் மாநகர காவல் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 100 அல்லது 94981- 00945 ஆகிய எண்களிலோ தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என காவல்துறை ஆணையர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.