
இந்திய தண்டனை தொகுப்பு சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். அந்த மசோதாவில், “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.
இந்திய தண்டனைச் சட்டம் 354-பி பிரிவில், ஆடைகளை அகற்ற வைக்கும் எண்ணத்துடன் பெண்களைத் தாக்கிய குற்றம் நிரூபனமானால் 7 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ள தண்டனை இனி 10 ஆண்டுகள் என மாற்றம் செய்யப்படுகிறது. பெண்களை அச்சுறுத்தல், வெறுப்பேற்றும் வகையில் பின்தொடர்தல், பெண் மறுத்தும் அவருடன் தனிமையில் உரையாடுதல் போன்றவைகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். மைனர் பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் பிரிவு 372, மைனர் பெண்களை விலைக்கு அல்லது வாடகைக்கு வாங்குதல் என்ற பிரிவு 373 ஆகியவற்றில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்ட மசோதா ஒரு மனதாக பேரவையில் நேற்று (05.02.2021) நிறைவேற்றப்பட்டுள்ளது.