Skip to main content

அனுமதி இல்லாத பார்.. வழிப்பறியில் இறங்கும் இளைஞர்கள்.. நடவடிக்கை எடுக்குமா போலீஸ்?

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

Unlicensed bars.. Youths who go on the streets.. Will the police take action?

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 140க்கு 80 டாஸ்மாக் கடைகளில் பார் அனுமதி இல்லை. ஆனால், தடையின்றி பார் நடப்பதுடன் இரவு பகலாக மது விற்பனையும் நடக்கிறது. இந்த அனுமதிக்கப்படாத பார்களிலும் அரசுக்கு வரவேண்டிய தொகையை விட 2 மடங்கு கூடுதல் கட்டணத்தை யாரோ வசூல் செய்து செல்கிறார்கள். அதனால் எந்த அதிகாரியும் கண்டுகொள்வதில்லை. இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது.

 

சில நாட்களுக்கு முன்பு ஆலங்குடி சப்-டிவிசன் வடகாடு காவல் எல்லையில் உள்ள வானக்கண்காடு டாஸ்மாக் கடையில் அனுமதி இல்லாத பாரில் காலை நேர மது விற்பனையில் ஈடுபட்ட பரிமளம் என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அந்த பாரின் உரிமையாளர் மதியழகன் காவலரை தனது காலணியால் தாக்க முயன்றார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதன் பிறகு அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த வடகாடு காவல் நிலையம், மதியழகனை இன்னும் கைது செய்யவில்லை. 

 

இதே போல அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் அனுமதி இல்லாத பாரில் மது அருந்தும் சிலர், அந்த சாலையின் வழியாக செல்வோரிடம் வம்பிழுத்து அவர்களை தாக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன. நேற்று இரவு பஞ்சாத்தி ஆனந்த் என்பவர் தன்னிடம் வேலை செய்தவர்களுக்கு சம்பளம் கொடுக்க அந்தச் சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது அந்த அனுமதி பெறாத பாரில் மது அருந்திவிட்டு வெளியே வந்த சிலர், ஆனந்தை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை வழிப்பறி செய்துள்ளனர். இதனால், அந்தக் கிராம மக்கள் திரண்டு சாலை மறியல் செய்துள்ளனர்.

 

சாலை மறியலில் இருந்த கிராம மக்கள் கூறும் போது, “அனுமதி பெறாத பாரில் எந்த நேரமும் மது விற்பனை நடக்கிறது. இதனால் அடிக்கடி சட்ட ஒழுங்கு பிரச்சனை நடந்தாலும் போலீசார் கண்டுகொள்வதில்லை. அதன் விளைவு தான் இன்று ஆனந்த் தாக்கப்பட்டது. சாலை மறியலுக்கு பிறகு வந்த போலீசார் தாக்கியவர்களை கைது செய்யாமல் எங்களிடம் வந்து சமாதானம் பேசுகிறார்கள். இந்தப் பகுதியில் உள்ள அரசு நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனை போலீசார் தெரிந்தும் தெரியாதது போல உள்ளனர். இதனால் பெரிய விபரீதங்கள் ஏற்படும் முன்பே நடவடிக்கை எடுத்தால் நல்லது” என்றனர். ஆனந்தை தாக்கியவர்களை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்த பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்